கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்தனர்.கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 7-ந்தேதி அதிகபட்சமாக 7,300 பேர் பலியாகி இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அமெரிக்காவில் தான் அதிகமானோர் உயிரிழந்தனர். அங்கு 1,535 பேர் பலியானார்கள். இதே போல் இங்கிலாந்தில் 717 பேரும், பிரான்சில் 574 பேரும், இத்தாலியில் 566 பேரும், ஸ்பெயினில் 547 பேரும், பெல்ஜியத்தில் 303 பேரும் இறந்துள்ளனர்.
அதே போல் நேற்று மேலும் 71 ஆயிரம் பேர் புதிதாக வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்து 23 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.
கொரோனா வைரசால் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதற்கிடையே புகழ் பெற்ற நியூயார்க் நகரம் கொரோனா தொற்றின் மையப்புள்ளியாக மாறி உள்ளது. அந்த நகரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 6,900 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
நியூயார்க் நகரம் பாதிப்பு எண்ணிக்கையில் சீனா-இங்கிலாந்தை முந்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மே மாதம் 11-ந்தேதி வரை நீட்டிப்பதாக அதிபர் இமானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராததால் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை நீட்டித்து வருகின்றன.