மருத்துவ சுனாமியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரசை வீழ்த்த மருந்து கண்டுபிடிப்பது எப்போது என்பது குறித்து டாக்டர் சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.உலகையே அலற வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசை அழிக்க இன்னும் மருத்துவ உலகம் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆபத்தில் இருந்து இருதுமீள முடியாமல் உலகமே தவித்துக் கொண்டிருக்கிறது.
இதுபற்றி மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் சவுந்தரராஜன் கூறியதாவது:-
மருத்துவ உலகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் என்பது மிகப்பெரிய சுனாமி போல் உருவெடுத்து இருக்கிறது. பாக்டீரியா மற்றும் வைரசுக்கு வேறுபாடுகள் உண்டு.
பாக்டீரியாவை பொறுத்தவரை உயிரோட்டம் உடையது. இனவிருத்தி செய்யும். அதே நேரத்தில் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் நமக்கு தெரியும்.
வைரஸ் என்பது மரபணு சம்பந்தப்பட்டது. அதற்கு உயிர் கிடையாது. ஆனால் கடுமையான வீரியம் உடையது. நமது உடலில் உள்ள செல்களில் புரோட்டாபிளாசம் நியூக்ளியஸ் இருக்கும். இதில் நியூக்ளியசில் ஆர்.என்.ஏ., டி.என்.ஏ. என்ற மரபணுக்கள் இருக்கும்.
இதில் ஆர்.என்.ஏ. மரபணு துகளில் இருந்து உருவெடுத்து இருப்பதுதான் இப்போது வெளிப்பட்டுள்ள கொரோனா வைரஸ். கண்ணுக்கு தெரியாத இந்த நுண் துகளைச் சுற்றி கொழுப்பு படலம் படிந்து இருக்கும்.
இந்த வைரஸ் வவ்வாலில் இருந்து வந்தது என்றும் ஆய்வகத்தில் இருந்து வெளிபட்டதும் என்றும் இருவேறு கருத்துக்கள் உலாவருகின்றன. அதை பற்றி கவலையில்லை.
தற்போது மனிதரில் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இது வாய், மூக்கு, கண் இமை ஆகிய மூன்று பகுதிகள் வழியாக உடலுக்குள் செல்லும். இந்த மூன்று வழிகளின் வழியாக செல்வதற்கு காரணம் இந்த மூன்று வழிகளிலும் இயற்கையாகவே வழுக்கு தன்மையுடைய சவ்வு படிமம் அமைந்துள்ளது.
இந்த வழியாக செல்லும் கொரோனா வைரஸ் முதலில் செல்லும் இடம் தொண்டை குழியின் டான்சில் பக்கம். அங்கு இந்த வைரஸ் சென்றதும் இதை வரவேற்பதற்கு ஏதுவான படலம் உள்ளது. அதில் போய் ஒட்டியதும் தனது மேல் படர்ந்த கொழுப்பு படலத்தை கழற்றி விடும்.
அதன் பிறகு ஆர்.என்.ஏ.வில் இருந்து டி.என்.ஏ. ஆக உருவாகும். அதாவது சாதாரண மனிதன் ஒரு பயங்கரவாதியாக உருவெடுப்பது போல் இந்த டி.என்.ஏ.வாக உருவானதும் அதிக அளவில் பெருக்கம் அடையும். அதன் பிறகு உடலில் உள்ள செல்களை தாக்க தொடங்கும்.
நமது உடலை பொறுத்த வரை மூன்று அடுக்கு தடுப்பு ஆற்றல் மண்டலம் உள்ளது. இயற்கையாகவே உடலுக்குள் இருக்கும் இந்த பாதுகாப்பு வளையம் அற்புதமானது.
வெளியில் இருந்து ஒரு வைரஸ் உள்ளே புகுந்ததும் ஒற்றர்கள் போல் உடனடியாக தகவல்களை பரிமாறுவதும் உள்ளே நுழைந்த வைரசை எதிர்த்து போராடுவதும் தீவிரமாகும்.
அதே நேரத்தில் நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்திகள் உள்ளே புகுந்த வைரசின் வீரியத்தோடு போராடும்போது வைரஸ் வெற்றி பெற்று விட்டால் ஆபத்து உடலுக்கு. அதைத் தொடர்ந்து அந்த வைரஸ் நுரையீரலுக்குள் நுழையும்.
பின்னர் ரத்த நாளங்கள், மூளை பகுதி என்று எல்லா பகுதிகளையும் துவம்சம் செய்து விடும். இத னால் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது.
இந்த வைரசை கண்டுபிடித்து 4 மாதங்கள்தான் ஆகிறது. வைரசை பொறுத்தவரை கோடிக்கணக்கில் உள்ளது. விலங்குகளில் இருக்கிறது. தாவரங்களில் இருக்கிறது. ஒவ்வொரு வைரசும் ஒவ்வொரு விதமானது.
இந்த வைரசை ஆய்வகத்தில் பசுப்பாய்ந்து சிகிகல்சரில் போட்டு வளர விடுவார்கள். அதன் பிறகு பல வகை மருந்துகளை போட்டு எந்த மருந்தில் இந்த வைரஸ் செயல் இழக்கிறது என்பதை கண்டுபிடிப்பார்கள். அதன் பிறகு அதை விலங்கினங்களில் செலுத்தி பரிசோதிப்பார்கள்.
அப்போதுதான் எவ்வளவு “டோஸ்” கொடுப்பது இதை அதிகமாக கொடுத்தால் என்ன பக்க விளைவுகள் வருகிறது. இந்த மருந்தை கொடுக்கும் போது மற்ற மருந்துகளை தாக்குகிறதா? என்பது போன்ற ஆய்வுகள் அனைத்தும் செய்யப்படும். அதன் பிறகுதான் இறுதி கட்டமாக மனித உடலில் செலுத்தி ஆய்வு செய்து பின்னர் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு பயன்பாட்டுக்கு வரும்.
இதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேல் ஆகும். தற்போது 16 வகையான மருந்துகளை கொரோனா வைரசை கட்டுப்படுத்த பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அதில் ஒன்று நமது ஆயுர்வேதத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் கற்பூரமும் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுகள் நிறைவடைந்து மருந்து தயாராகி வருவதற்கு காலதாமதம் ஆகும். அது வரை நம்மை காக்க நமக்கு இருக்கும் ஒரே வழி சமூக இடைவெளி, தனித்திருத்தல், முக கவசங்களை அணிந்து பாதுகாப்பாக இருத்தல் போன்ற வழிமுறைகள்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.