இலங்கையில் சிக்கித் தவிக்கும் 81 மலேசியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்புவர் என பெர்னாமா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் டத்துக் செரி ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த இணைக்கம் எட்டப்பட்டதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு அமைச்சர்களும் மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு பற்றியும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த கருத்துகளையும் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவர்களை அழைத்து செல்லவரும் மலேசிய எயாலைன்ஸ் விமானம் கொழும்பில் தரையிறங்குவதற்கும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹிஷாமுதீன், “உதவிகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளுக்கு ஒரு சான்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.