கொரோனா” வைரஸ் பரவலால் ஜேர்மனிய மிருகக்காட்சி சாலைகள் மூடப்பட்டிருப்பதால், வருமானமேதுமின்றி பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளின் நிர்வாகங்கள், தம்மிடமுள்ள மிருகங்களை கருணைக்கொலை செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளன.
நாடே முடங்கிப்போயிருக்கும் சூழ்நிலையில், மிருகக்காட்சிச்சாலைகளுக்கு மக்கள் வருவது முற்றாக நின்றுபோயுள்ளதால், மிருகங்களுக்கு தேவையான உணவை வழங்குவதற்கும், அவற்றை சரியான முறையில் பராமரிப்பதற்கும் தேவையான பொருளாதாரம் இல்லாததாலேயே இந்த யோசனை பரிசீலிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
தகுந்த காலநிலைகள் நிலவும்போதும், பொதுவிடுமுறை நாட்களிலும் பெருந்தொகையான மக்கள் ஜேர்மனிய மிருகக்காட்சிச்சாலைகளுக்கு வருவதாலும், மக்கள் வருகை தரமுடியாத நேரங்களில், மிருகக்காட்சிச்சாலைகளிலிருந்து நேரலை காணொளியாக அஞ்சல் செய்யப்படும் நிகழ்வுகளின் மூலம் இணையவழிக்கட்டணமாக கிடைக்கும் பொருளாதாரத்தாலும் இயங்கிவந்த மிருகக்காட்சிச்சாலைகள், “கொரோனா” வால் ஜேர்மனி முடக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் பொருளாதாரச்சரிவை சந்தித்துள்ளன.
இந்நிலையில், வருமானமில்லாமல் தவிக்கும் இம்மிருகக்காட்சிச்சாலைகள், தன்னார்வலர்கள், மற்றும் அமைப்புக்கள் வழங்கிவரும் சிறிய சிறிய நன்கொடைகள் மூலமே இப்போது இயங்கிவருவதாகவும், எனினும், தற்போதைய நிலைமை நீடித்தால் பராமரிப்புக்காக அதிக செலவை கொடுக்கும் மிருகங்களை குறைக்கவேண்டிய நிலைய தவிர்க்க முடியாதெனவும் தெரிவிக்கும் நிர்வாகங்கள், மிருகங்களை உணவில்லாமல் பட்டினியால் உயிரிழக்க விடுவதை காட்டிலும், கருணைக்கொலை செய்வதே மேலானதென கருதுவதாகவும், இந்நிலை வருமானால், எந்தெந்த மிருகங்களை கருணைக்கொலை செய்வதென்ற பட்டியலையும் தயார்நிலையில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றன.