ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. நம் ஆண்டவராகிய இயேசு உயிர்ப்பு குறித்து நற்செய்தியாளர் யோவான் எழுதிய நூலிலிருந்து அந்த நிகழ்வை வாசிப்போம்.
விபத்து, நோய்கள் ஆகியவற்றால் கடும் துன்பத்தில் உழன்று சாவின் விளிம்பு வரை சென்று திரும்பியவர்களை ஒரு பேச்சுக்காக “ செத்துப் பிழைத்தவர்கள் “ என்கிறோம். ஆனால் இவர்கள் மரணத்தை வென்றவர்கள் கிடையாது. உலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே.
தன் சாவை எப்படி அவர் முன்னறிவித்தாரோ அதேபோல் “நான் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்” என்பதையும் முன்னறிவித்தார். இறைமகன் இயேசுவின் முன்னால் மரணம் மண்டியிட்டது. “சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது, இயேசு உயிர்த்தார், அல்லேலூயா” என்னும் வெற்றிப் பாடல் நம் உள்ளங்களில் இந்த ஈஸ்டர் திருநாளில் ஒலிக்கின்றது. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் காட்டும் உட்பொருள் பற்றி நம்மில் எத்தனை பேர் முழுமையாக அறிந்திருக்கிறோம். அதைப் பகிரும் முன் நம் ஆண்டவராகிய இயேசு உயிர்ப்பு குறித்து நற்செய்தியாளர் யோவான் எழுதிய நூலிலிருந்து அந்த நிகழ்வை வாசிப்போம்.
தலையை மூடியிருந்த துண்டு
வாரத்தின் முதல்நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை(யோவான் 20: 1-9).
மீண்டும் வருவார்
யோவானின் இந்தப் பதிவு நமக்கு என்ன உணர்த்துகிறது…
பாலஸ்தீன நாட்டின் பாரம்பரியப்படி, ஒருவர் இறந்த மூன்றுநாளுக்குப்பிறகு, கல்லறைக்கு அவருடைய உறவினர்கள் சென்று வருவது வழக்கம். ஏனென்றால், முதல் மூன்று நாட்கள் இறந்தவரின் ஆவி, கல்லறையைச் சுற்றிவந்து, தன்னுடைய உடலுக்குள் மீண்டும் செல்ல முயற்சி செய்யும் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால், மூன்று நாட்களுக்குப்பின் உடல் அழுகிவிடுவதால், ஆவிக்கு தன்னுடைய உடலை அடையாளம் காணமுடியாமல், தனது உலகத்துக்குத் திரும்பிவிடும்.
வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. யூதர்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமை. ஓய்வுநாள் முடிந்தவுடன் விடியற்காலையிலேயே, மரியா மக்தலேனா கல்லறைக்குச்செல்கிறாள். இயேசுவின் உடலைக்காணவில்லை என்றவுடன், அவள் திரும்பிவந்து பேதுருவிடமும், யோவானிடமும் சொல்கிறாள்.
யோவான் அங்கே, துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டதாகவும், அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச்சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பார்க்கிறோம். விவிலியத்திலே இதற்குப் பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில், தலைவர் வீட்டிலே சாப்பிடும்போது, கைதுடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் கைத்துணியைத் துடைத்தால், அதை மீண்டும் மடித்து வைத்துவிட்டுச்சென்றுவிடுவார்.
ஒருவேளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, யாராவது வந்தால், அந்தத்துணியை அப்படியே மடிக்காமல், சுருட்டிப் போட்டுவிட்டுச்சென்றுவிடுவார். இதனுடைய பொருள், அவர் மீண்டும் வருவார் என்பதே. இதைத்தான் திருத்தூதர்பணி நூல் அதிகாரம் 1, வசனம் 11-ல் பார்க்கிறோம்.. “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லாவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்”. ஆக, இயேசு மீண்டும் வருவார் என்கிற செய்தி விவிலியம் வழியாக நமக்குத் தரப்படுகிறது.
பெண்களுக்குத் தரப்பட்ட செய்தி
இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை முதலில் அறியும் பேறு மரியா மக்தலேனா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகிய பெண்களுக்குத்தான் கிடைத்தது. ஆண்களே பெண்களைவிட வீரமும், துணிவும் நிறைந்தவர்கள் என்னும் போலிப் பரப்புரையை வரலாற்றில் பல பெண்கள் உடைத்தெறிந்திருக்கிறார்கள். இந்தப் பெண்களும் அவ்வாறே!
ஆண் சீடர்கள் அஞ்சி நடுங்கி, ஒளிந்துகொண்டபோது, இந்தப் பெண்கள் துணிவுடன் “காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் கல்லறைக்குச் சென்றார்கள்”. எங்கே அன்பு உள்ளதோ, அங்கே அச்சம் இல்லை என்னும் யோவானின் (1 யோவா 4: 18)சொற்களை இவர்கள் எண்பித்துள்ளனர். இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என்னும் நற்செய்தியை வானதூதர் வழியாக இவர்கள் பெற்றுக்கொண்டனர்.
அன்பு அச்சத்தை வெல்கிறது, அன்பு சாவையும் வெல்கிறது. இயேசு தந்தையின்மீது கொண்ட அன்பினால் சாவின் மீதிருந்த அச்சத்தை வென்றார். சாவையும் வென்றார். மரியா மக்தலேனா, இயேசுவின்மீது கொண்ட அன்பினால் சாவு, இருள், கல்லறை, பிலாத்துவின் வீரர்கள் என்னும் அனைத்து அச்சங்களையும் வென்றார். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை முதன்முதலில் அறிந்துகொண்டார்.
மறைபொருள்
‘கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்’ என்பது கிறித்தவ விசுவாசத்தின் மறைபொருள். தளர்ந்து போயிருக்கிற, துன்பங்களால் வாழ்வே வெறுத்துப் போயிருக்கிற ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய நற்செய்தி. கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற செய்தியே மனிதவாழ்வுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பிலேதான் மீட்பின் வரலாறு நிறைவடைகிறது.