காற்று சீராக்கி பயன்படுத்தும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயம்!

314 0

காற்று சீராக்கி (ஏ.சி) பயன்படுத்தும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காற்று சீராக்கிகளைக் கொண்ட அறைகளில் சுலபமாக வைரஸ் தொற்றக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக விசேட நிபுணத்துவ மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

காற்று சீராக்கிகளைக் கொண்ட அறைகளில் வைரஸ் கிருமிகள் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நபர் ஒருவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ அதன் ஊடாக பரவக்கூடிய வைரஸ்கள், சூரிய வெளிச்சம் உள்ள இடத்தை விடவும் காற்று சீராக்கிகளைக் கொண்ட அறைகளில் நீண்ட நேரத்திற்கு உயிர்ப்புடன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனால் பணியிடங்களிலும் காற்று சீராக்கிகளை விடவும் இயற்கை காற்றை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறைகளை பின்பற்றுவது உசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காற்று சீராக்கிகளைக் கொண்ட பெரிய பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட கட்டடங்களில் நீண்ட நேரம் இருப்பது வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயத்தை அதிகரிக்கும் என டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.