கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய முயற்சிகளுக்கு ஆதரவாக பாக்கிஸ்தான் அரசாங்கம், சார்க் கொவிட் -19 அவசர நிதியத்துக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளது.
பாக்கிஸ்தானின் முடிவை சார்க் செயலகத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்கும்போது, உறுதியளிக்கப்பட்ட நிதியின் அனைத்து செயற்பாடுகளையும் சார்க் செயலகத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், சார்க் சாசனத்தின்படி உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் நிதியத்தின் பயன்பாட்டுக்கான முறைகள் இறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளிநாட்டு செயலாளர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சார்க் செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தான் ஸ்தாபக உறுப்பினராக இருப்பதால், பிராந்திய ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான தளமாக ‘சார்க்’ஐக் கருதுகிறது. அதனடிப்படையில், சார்க் செயல்முறைக்கு அர்ப்பணிப்புடன் உள்ளதோடு பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து செயல்படும் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.