“மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே” என்ற கோஷத்துடன் மதராசிகளை (தென்னகத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையில் இருந்து விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது மண்ணில் அறிமுகப்படுத்தியுள்ளனர் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் மறவன்புலவு சச்சிதானந்தமும். கேரள கஞ்சா மற்றும் வயாகரா மாத்திரைகள் வரிசையில் தமிழரை நாசமாக்கவென்றே கொண்டுவரப்பட்டது தான் சிவசேனா. தமிழரின் ஆயுதப் போராட்டம் தோற்றிருக்கலாம் ஆனால் சுமார் 40 ஆயிரம் மறவர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இரத்தம் சிந்தியதால் வலுவடைந்த தமிழ்த் தேசியம் என்ற பலமான அரசியல் சக்தியை வெடி வைத்து தகர்க்கும் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் கருவிகளாக இவர்கள் இருவரும் செயற்படுகின்றனர்.
கடந்த பொதுத் தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் அதனை ஆதரிப்பவர்கள் என்று அர்த்தமில்லை. தமிழரின் ஒன்று திரண்ட சக்தி சிதறிவிடக் கூடாதே என்ற எண்ணத்துடன் தான் தமது வாக்கைச் செலுத்தினர். இந்திய அரசியலும் இலங்கைத் தமிழர் அரசியலும் நேரெதிரானவை. இந்திய அரசியலில் எந்தெந்தக் குப்பைத் தனங்களெல்லாம் உள்ளனவோ அதையெல்லாம் எமது மண்ணில் இறக்குமதி செய்ய முயல்கின்றனர் யோகேஸ்வரனும் மறவன்புலவு சச்சிதானந்தமும்.
இந்தியாவில் நேருவுக்குப் பின் இந்திரா அவருக்குப் பின் ராஜீவ் அதற்குப் பின் ராகுல் என தலைமுறைத் தலைமைகளை கட்சிகள் அறிமுகப்படுத்தும். அதேபோல் கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் கனிமொழி என தமிழகத்திலும் நிலைமை தோன்றியது. ஜல்முகாஷ்மீர் மாநிலத்திலும் அப்துல்லா தலைமுறை மூன்று. உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ். அகிலேஷ் என்றும் கர்நாடகத்தில் தேவகவுடா. குமாரசாமி என்றும் நிலைமை தோன்றியது. கண்ணை மூடிக் கொண்டு பரம்பரை விசுவாசத்தில் மக்கள் வாக்களிப்பர் ஆனால் ஈழத்தமிழரின் எண்ணவோட்டம் 2009 வரை வேறுமாதிரியே இருந்தது.
இலங்கையில் தமிழரின் தலைமைத்துவம் சேர்.பொன்.இராமநாதன் சேர்.பொன்.அருணாசலம் என பிரவுத்துவக் குடும்பங்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் இவர்களது வாரிசுகளை (குறிப்பாக மகாதேவாவை) தமது தலைமையாக தமிழர் தெரிவு செய்யவில்லை. அடுத்த தலைமையாக ஜீ.ஜீ.பொன்னம்பலத்தையே தேர்ந்தெடுத்தனர். ஜீ.ஜீக்குப் பின்னர் அவரது வாரிசு குமார் பொன்னம்பலத்தை தமது தலைமையாக ஏற்கவில்லை. மலேசியாவில் பிறந்த கிறிஸ்தவரான தந்தை செல்வாவையே ஏற்றார். செல்வாவுக்குப் பின் அவரது மகன் சந்திரகாசனை ஏற்கவில்லை. அமிர்தலிங்கத்தையே ஏற்றனர். ஆயுத போராட்டம் தலைதூக்கிய பின்னர் 36 குழுக்களில் ஒன்றான தமிழீழ தேசிய இராணுவத்தை வழி நடத்திய அமிரின் மகன் பகீரதனையோ அல்லது தன்னை ஒரு காலத்தில் தீவிரவாதியாக இனங்காட்டிக் கொண்ட காண்டீபனையோ ஏற்கவில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனையே ஏற்றனர். புலிகள் அழிக்கப்படாமல் இருந்தால் செயற்திறனுடைய புலிகளின் அடுத்த மட்டத் தலைமை ஒன்றையே ஏற்றிருப்பர் தமிழர். யுத்தத்தின் பின்னர் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திடம் தலைமை கைமாறியுள்ளது. அடுத்த தலைமை நிச்சயம் சம்பந்தன் ஜயாவின் பரம்பரையல்ல. ஒருவர் பிறப்பால் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதையோ பிரதேசம் என்பனவற்றையோ எமது மக்கள் கருத்தில் கொள்வதில்லை. இந்த உறுதியான நிலைப்பாட்டை சுரேஸ்பிரேமச்சந்திரன் மாகாணசபைத் தேர்தலின் பின்னர் அசைத்துப் பார்க்க முயன்றதன் பலனைக் கடந்த பொதுத் தேர்தலில் அனுபவித்துவிட்டார். அடிபட்ட விலங்கு தனது புண்ணை நக்கிக் கொண்டிருப்பது போல அவரது செயற்பாடு அமைந்துள்ளது.
தமது கட்சியின் சார்பாக தனது சகோதரன் சர்வேஸ்வரனின் பெயரை அமைச்சரவைக்குச் சிபார்சு செய்தார் சுரேஷ்பிரேமச்சந்திரன். ஆனால் அந்தப் பதவிக்கு யார் பொருத்தமானவரோ அவரையே தேர்ந்தெடுத்தார் முதல்வர். இன்று வடக்கு மாகாண சபையில் நிலவும் அத்தனை கோளாறுகளுக்கும் பிள்ளையார் சுழிபோட்டது சுரேஷ்பிரேமச்சந்திரனே. பகிரங்கமாக முதல்வரைக் குற்றம்சாட்டப் போக முதல்வர் தனது சகோதரனின் பெயரைத் தான் சுரேஷ் முன்மொழிந்தார் என்ற விடயத்தைப் போட்டுடைத்தார். சூழலியலில் அக்கறையும் ஆர்வமும் மிக்கவரே விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதை உணர மறுத்து சுரேஷ் ஜங்கரநேசனை கட்சியில் இருந்து விலத்தினார். மட்டக்களப்பில் தமிழராசிரியர் சங்கத் தலைவர் வனசிங்ஹா உட்பட படுகொலைகளுக்கு காரணமானவரும் ஒரு முஸ்லிம் யுவதியை (நியாசா) காணாமல்போகச் செய்தவருமான இரா.துரைரத்தினம் வவுனியாவில் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட குமுதனின் (சேமமடு) குடும்பத்தினர் உட்பட பலரை இம்சைப்படுத்தியவருமான சிவசக்தி ஆனந்தன் போன்றோர் தான் தனது கட்சியில் இருக்க முடியும் என நிரூபித்தார் அவர். இந்தத் திருமிருக்காகவே தான் வாக்கால் அடித்துத் துரத்தினர் தமிழ் மக்கள்.
தமிழரின் அடுத்த துரதிஷ்டம் சுமந்திரன். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் நாவாந்துறை போன்ற பகுதிகளில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரேயொரு கிறிஸ்தவர் சுமந்திரனே என்ற செய்தி பரப்பப்பட்டது. பாசையூர் குருநகரில் என்ன இருந்தாலும் அவர் யேசுவைக் கும்பிடுகிறவர் என்ற கருத்தை முக்கிய பிரமுகர் ஒருவர் பரப்பினார். இக் கருத்து எடுபட்டது என்பது தான் கசப்பான உண்மை. இவ்வளவு காலமும் மதம் என்பதை மக்கள் கருத்தில் கொள்ளவில்லை. கிறிஸ்தவரான செல்வநாயகத்தை தந்தை என அழைத்தது இந்துக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட தமிழ்ச் சமூகம் அவரது சடலத்தை எரித்ததை கிறிஸ்தவர்களும் தவறாகக் கொள்ளவில்லை. அப்போதெல்லாம் நாம் தமிழர் செல்வா எங்கள் தலைவர் என்ற உணர்வே மேலோங்கியிருந்தது. அந்த இறுக்கமான நிலையை தகர்த்துவிட்டனர் சுமந்திரனின் ஆதரவாளர்கள்.
இன்று 30 வருடமாக என்ன செய்ய முடிந்தது என்று திமிர்த்தனமாக வவுனியாவில் கேட்கிறார் சுமந்திரன். இந்தத் தமிழ்த் தேசியத்தினர் விளைவாகவே தான் தேசியப்பட்டியல் மூலம் முதன் முதலாகப் பாராளுமன்றம் சென்றதையும் அவர் மறந்துவிட்டார். .இதுவரை வன்னி மட்டக்களப்பில் விருப்புவாக்கைச் செலுத்திய போது மக்கள் கவனத்தில் கொள்ளாத ஒரு விடயத்தை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தியாயிற்று. ஜோசப் பரராஜசிங்கம் – செல்வம் அடைக்கலநாதன் — சாள்ஸ் நிர்மலநாதன் — போன்றோர் விருப்பு வாக்கில் முன்னிலை வகித்த போது மக்கள் அதனையும் கருத்தில் கொள்ளவில்லையே. இன்று வியாழேந்திரன் எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு அவர் கிறிஸ்தவர் என்பதோ புளொட் சார்பான வேட்பாளர் என்பதோ காரணமல்ல. இரா.துரைரத்தினம் கோவிந்தம் கருணாகரன் போன்ற கொலைகாரர்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் போய்விடக் கூடாது என்பதுவும் தான்.
தமிழர் அரசியலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் செலுத்திய செல்வாக்கு இரகசியமானதல்ல. இந்துக்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளும் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். எப்போதுமே தனது மனதுக்குச் சரியெனப்பட்டதை துணிந்து சொல்பவர் அவர். இத்தாலிக்குள் பத்திக்கான் எப்படித் தனிநாடாகத் திகழ்கின்றதோ அப்படியே புலிகளின் காலத்தில் மடுப்பிரதேசம் தனித்துவமாகத் திகழ்ந்தது. இதற்கு இராயப்பு ஜோசப் ஆண்டகையே காரணம் என்பது மட்டுமல்ல அவரது கருத்தை நிராகரிக்க முடியாதவர்களாக புலிகள் தரப்பு இருந்தது என்பதும் உண்மை. தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இராயப்பு ஜோசப் ஆண்டகை செலுத்தும் அக்கறையில் ஒரு வீதம் கூட சிவசேனா இறக்குமதியாளர்கள் காட்டவில்லை என்பது உண்மை.
இந்தக் குழப்ப நிலைகளுக்கு தமிழரசுக் கட்சியின் செயலர் கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கமும் ஒரு வகையில் காரணம். இறுதி யுத்தம் முடியும் வரை ரணிலின் செல்வாக்குக்குட்பட்டவராக இருந்த யோகேஸ்வரனை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அறிமுகப்படுத்தியவர் அவர் தான். ஏற்கனவே இரு தடவை எம்.பியாக இருந்த துரைராஜசிங்கம் 2010 தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இந்த விஷச்செடி விருட்சமாகியிருக்காது. தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருந்த யோகேஸ்வரன் எப்படி நடந்து கொண்டார் என்பது துரைராஜசிங்கம் அறியாததல்ல. ஓரிரு தையல் இயந்திரங்களின் விவகாரத்தில் விடுதலை இயக்கத்துடனும் எழிலனுடனும் முரண்பட்டவரை தமிழர் நலன் பேணுபவராக எண்ணியது தவறு. முன்னரே தமிழரசுக்கட்சிக் காரனாகியவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவரிடம் விளக்கம் கேட்பது போல எச்சரிக்கைக் கடிதம் அனுப்பத் தெரிகிறது துரைராஜசிங்கத்துக்கு. பேராசிரியருக்கு அனுப்பியது போல் சிவசேனாவா தமிழரசுக்கட்சியா இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யவும். தமிழரசுக் கட்சிக்குள் இருப்பதாயின் “இன ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய அமைப்புகளுடன் உள்ள தொடர்பைத் துண்டிக்கவும்” என யோகேஸ்வரனுக்கு கடிதம் எழுதத் தெரியாதா? இந்தச் சட்டத்தரணிக்கு.
கட்சியின் புதிய தலைவராக மாவையும் செயலராக இவரும் தெரிவு செய்யப்பட்ட போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் இந்து மற்றும் கிறிஸ்தவ மத குருக்கள் மட்டுமே ஆசி கூறினர். முஸ்லிம் மதத் தலைவர்கள் எவரும் இந் நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. தந்தை செல்வாவின் கட்சி இது என்பதை மறந்து முஸ்லிம் மக்களை புறக்கணித்தனர். தற்போது மத நல்லிணக்கத்துக்கு எதிரான சிவசேனாவின் செயற்பாட்டுக்கு யோகேஸ்வரனை அனுமதிப்பதன் மூலம் தமிழ்த் தேசியத்தை உடைக்கும் சக்திகளின் கை மேலோங்கவுள்ளது. வடக்கு பிரதி அவைத் தெரிவில் காட்டிய அவசரத்தை இதில் ஏன் காட்டவில்லை. எழுக தமிழ் நிகழ்வின் விளைவாகவே அநுராதபுரத்தில் இந்துக் கோவில் தாக்கப்பட்டது என விளக்கமளிக்கத் தெரிகிறது இவருக்கு. தமிழரை அடிப்பதும் ஆலயங்களை அழிப்பதும் சிங்களவரின் பாரம்பரியம். இதனால் இவர் தமிழ் இளைஞர் பேரவையில் இணைந்தார் என்பது வரலாற்றை மறக்காதவர்களுக்குத் தெரியும். மறதி கூட இவருக்கு வசதியாக சில விடயங்களில் மட்டுமே ஏற்படுகிறது.
அடுத்தவர் மறவன்புலவு சச்சிதானந்தம். இலங்கைக்கு மருந்து அனுப்பச் சதி செய்தார் என்று கருணாநிதி தலைமையிலான அரசு இவர் மீது வழக்குப் போட்டது. அதன் பின் இந்தியாவில் மத்திய அரசு எதைச் சிந்திக்க முனைகிறதோ அதை இலங்கையில் செயலாக்க வேண்டுமெனத் துடிப்பவர் இவர். இங்கே உள்ள நிலைமை உணர்வுகள் இவருக்குத் தெரியாது. பிரபாகரன் தனது மகனுக்கு சாள்ஸ் அன்ரனி எனப் பெயரிட்டதன் மூலம் எதை உணர்த்தினார் என்பதை அறியாதவர். லெப்.கேணல் விக்ரருக்கு (மருசலின் பியூஸ்லஸ்) அந்தியே~;டிக் கிரியைகள் செய்வதற்காக அரியாலை திருமகள் வீதிக்கு ஜயர் வந்து சென்றார் என்று சொன்னால் நம்ப முடியாமல் வாயைப்பிளக்கக் கூடியவர். களத்தில் காயமுறும் சக போராளி என்ன சமயம் என்று எவரும் சிந்தித்ததில்லை. சமாதான காலத்தின் பின் நடந்த சமரில் வட்டக்கச்சி இராமநாதபுரத்தைச் சேர்ந்த முஸ்லிமான போராளி ஒருவரின் வித்துடல் கிறிஸ்தவ மற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் வித்துடல்களுக்கு நடுவே விதைக்கப்பட்டது என்ற உண்மைகள் புரியாதவர் களத்தில் காயமுற்ற போராளியின் சமயத்தைப் பார்த்து மக்கள் குருதிக் கொடை வழங்கவில்லை பொது மக்கள் காயமடையும் போதும் மனித நேயமே பெரிதாகத் தெரிந்ததே தவிர மதங்கள் தெரியவில்லை.
காங்கிரஸ் காலத்தில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட அனுமின் உலையால் ஈழத்தமிழருக்குப் பாதிப்பு இல்லை என பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார். தற்போது மதவெறியால் கட்டியமைக்கப்பட்ட கட்சியின் ஆட்சிக் காலத்தில் சிவசேனையுடன் வந்துள்ளார். இவரது வயதுக்கு பம்பாயில் இருந்து தமிழர்கள் சிவசேனாவினால் அடித்து விரட்டப்பட்ட வரலாறு தெரியாமல் இருக்குமா? வரதராஜ முதலியார் போன்றோர் தலையெடுத்த பின்னரே அங்கு தமிழருக்கெதிரான வன்முறையை சிவசேனாவால் மேற்கொள்ள முடியாமல் போனது என்பதை அறியாதவரா இவர். வந்தமா புத்தக வியாபாரத்தைக் கவனித்தோமா உறவினரைச் சந்தித்தோமா என்று இருப்பது நல்லது. ஆட்சியில் இருப்போரின் நிகழ்ச்சி நிரலை இங்கு இறக்குமதியாக்க வேண்டாம் என அவருக்கு இங்குள்ள நிலைமைகளை யாராவது விளக்குவது நல்லது. யோகேஸ்வரனுக்கு எதிராக துரைராஜசிங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என ஒவ்வொரு மாவீரர் குடும்பத்தினரும் போராட்டத்தை நேசிப்பவர்களும் காத்திருக்கின்றனர். அரசியற் கைதிகளின் விடயத்தில் சம்பந்தன் ஜயா திறப்பு என்னிடம் இல்லை என்று கையை விரித்தார். அதேபோல யோகேஸ்வரனுக்கு கடிதம் எழுத பேனா இல்லை என்று இவர் கைவிரிக்கக் கூடாது. ஏனெனில் மாகாண சபைக்கோ பாராளுமன்றத்துக்கோ செல்வதாயின் அதற்கான திறப்பு தமிழ் வாக்காளரிடமே இருக்கிறது.
தயாளன்