கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம்

344 0

மத்திய மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று (11.04.2020) முதல் உடனடியாக பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பொலிஸ் பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பொலிஸ் தலைமையகம் இன்று விஷேட ; அறிவிப்பை விடுத்ததுடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ கொரோனா ஒழிப்பு தொடர்பிலான பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைகளுக்கு உதவியாகவும், ; கீழ் மட்ட நிலையில் இருந்து முன்னெடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவும் பொறுப்பாக இவ்வாறு பொலிஸ் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டதாக ; தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அதற்கு கீழுள்ள பதவி நிலைகளில் உள்ளவர்களுக்கு 5,000 ரூபா விஷேட சன்மானக் கொடுப்பனவு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏழு ;நிலைகள் தொடர்பில், ஆண், பெண் என இரு பால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த ஊக்குவிப்பு சன்மான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

பிரதான பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் பரிசோதகர்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் சார்ஜன், பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் சாரதி சார்ஜன், பொலிஸ் சார்தி கான்ஸ்டபிள் நிலைகளில் உள்ளோருக்கே இந்த விஷேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தனது கடமையில் விடாமுயற்சியுடனும் உறுதியுடனும் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்

அதற்கமைய, கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உயிராபத்தைக் கூட கருத்திற் கொள்ளாமல் கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட, குறித்த பதவிகளில் உள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும் 5,000 ரூபா வெகுமதியை வழங்க, பொலிஸ் மா அதிபரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தொகையினை வழங்குவதற்கு, மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்குரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை தனது கடமைகளை முன்னெடுக்கும் போதும், சந்தேக நபர்களைக் கைது செய்யும் போதும் ஏற்பட்ட சங்கமிப்புக்களால் ; 141 பொலிஸார் ; தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். குறிப்பாக ஜா எல – பமுனுகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அனைவரும், கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அந்த பிரிவின் அதிகாரிகளும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளளாக்கப்பட்டுள்ளோரில் உள்ளடங்குகின்றனர்.