கரோனா வைரஸ் தொற்று இன்றி செய்தித் தாள்களை விநியோகிக்க நாளிதழ் நிறுவனங்கள் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பேசியதாவது:
மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்ப்பதில் தினசரி நாளிதழ்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. நாளிதழ்களை விநியோகம் செய்யும்போது கரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
அனைத்து பத்திரிகை நிறுவனங்களும் தங்கள் அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.
அச்சகத்தில் உள்ள அனைத்து இயந்திரங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். நாளிதழ்கள் அச்சடிக்கப்பட்ட பின்னர் விநியோகம் செய்ய வெளியே செல்லும்போது அதன் பேக்கிங் பண்டல்கள், நாளிதழ்களை கொண்டுசெல்லும் வாகனங்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
நாளிதழ் விற்பனை மற்றும் விநியோக முகவர்களுக்கு தேவையான முகக் கவசம் மற்றும் கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை நிறுவனங்கள் அவ்வப்பொழுது வழங்க வேண்டும். அதேபோன்று நாளிதழ்களை கொண்டுசெல்லும் நபர்களுக்கு தேவையான முகக் கவசம் மற்றும் கையுறை போன்றவற்றை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ ஆதாரம்
அப்போது நாளிதழ் நிறுவனங்கள் சார்பில், கரோனா வைரஸ் தொற்று வராமல் இருக்க ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் ஆணையரிடம் விளக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நாளிதழ் நிறுவனங்களுக்கு ஆணையர் பிரகாஷ் பாராட்டு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ப.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.