ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான பல நபர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலானோருடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களை கட்டுப்படுத்துவது கடினம். முதலாம் நபரின் மனைவிக்கும் 7 மாத குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை IDH வைத்தியசாலைக்கு அனுப்புயுள்ளதாக ஜா-எல பொது சுகாதார பரிசோதகர் K.A. அனுர அபேரத்ன கூறியுள்ளார்.
ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டதுடன் அவருடன் தொடர்பை பேணிய சிலர் சுயதனிமைக்குட்படுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
எனினும், அவர்கள் அதனை பின்பற்றாமல் பொலிஸாரை தவிர்த்து வந்ததன் காரணமாக சோதனை நடவடிக்கையின் மூலம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் அவர்கள் கடற்படைக்கு சொந்தமான ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டதுடன் அவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
சுதுவெல்ல ஸ்வர்ன ஹங்சவில பகுதியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் மருதானையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபருடன் தொடர்புபட்டவர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்திருந்தது.
தொற்றுக்குள்ளானவர்கள் என நேற்று கண்டறியப்பட்ட 6 பேரும் சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவரின் நெருங்கிய நண்பர்கள் என்பதுடன் அந்தப் பகுதியில் சுமார் 6 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.