இரண்டாவது மற்றும் மூன்றாவது தரப்புக்களையும் பரிசோதனை செய்ய வேண்டும்

287 0

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளியுடன் நெருங்கிய பழகிய முதல் தரப்பினர்களை மட்டுமில்லாமல் இரண்டாவது மற்றும் மூன்றாவது தரப்புக்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

“இந்த கட்டத்தில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் சரியான எண்ணிக்கையை கண்டுபிடிப்பதுதான். தற்போது, அறிகுறிகளைக் காண்பிக்கும் நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறார்கள், அதையும் தாண்டி, அவர்களின் முதல் தொடர்புகள் சோதிக்கப்படுகின்றன.

ஆனால் இது இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டி சொய்சா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 நோயாளிகளின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புள்ளவர்களின் விவரங்களை, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் இருந்து சேகரிக்க முடிந்தது என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதில் மொத்தம் 47,000 க்கும் அதிகமான நபர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 2,000-3,000 பேர் முதல் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சுகாதார அதிகாரிகள் குறைந்தபட்சம் முதல் தொடர்புகளை சோதித்து, அவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இது முடிந்ததும், மக்கள் எங்கு இருக்கிறார்கள், அறிகுறியற்ற நோயாளிகள் இருக்கிறார்களா, மேலும் எத்தனை பேர் பாதிக்கப்படக்கூடும் என்பதையும் நாங்கள் அறிந்துகொள்ள முடியும்” என நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்தவர்கள் வீடு திரும்பிய பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சம்பவங்களும் உள்ளன என சுட்டிக்காட்டிய அவர் எனவே, சமுதாயத்தில் 100 அறிகுறியற்ற நோயாளிகள் இருந்திருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைந்தாலும் கூட, அது இன்னும் பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.

“தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் 14 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் வீட்டிற்குச் சென்றபின்பும் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என கூறினார்.