அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகி விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு, சமூக இடைவெளி பராமரிப்பு, முக கவசம் அணிதல் என்று கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் கூட அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் விடாமல் துரத்தி வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களின் உடல்களுக்குள் கொரோனா வைரஸ் புகுந்து ஆட்டம் போட்டு வருகிறது.நேற்றுமுன்தினம் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 2,108 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு முந்தைய இரு நாட்களில் தொடர்ந்து கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
கொரோனா வைரசுக்கு இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் பலியாகி வருவது மிகுந்த வேதனை ஏற்படுத் துவதாக அமைந்துள்ளது.
இதுவரை 40-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் கொரோனா வைரசால் உயிரிழந்து இருப்பது அவர்களின் குடும்பங்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பலியானவர்களில், அதிகபட்சமாக கேரள மாநிலத்தை சேர்ந்த 17 பேர் அடங்குவார்கள்.
குஜராத்தை சேர்ந்த 10 பேர், பஞ்சாப் மாநிலத்தின் 4 பேர், ஆந்திராவின் 2 பேர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகி இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மற்றவர்களைப் பற்றிய விவரம் தெரிய வரவில்லை.
உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் 21 வயதானவர், மற்ற அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
கொரோனாவின் மையமாக நியூயார்க்தான் உருவாகி உள்ளது. இங்கும், அதன் அண்டை மாநிலமான நியூஜெர்சியிலும் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு பலியானவர்களில் 12-க்கும் மேற்பட்டவர்கள் நியூஜெர்சி மாகாணத்தில், குறிப்பாக ஜெர்சி நகரின் லிட்டில் இந்தியா மற்றும் ஓக் ட்ரீ ரோடு பகுதியில் வசித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
நியூயார்க்கில் மட்டுமே இந்திய வம்சாளியினர் 15 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். பென்சில்வேனியாவிலும், புளோரிடாவிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் தலா ஒரு இந்திய வம்சாவளியினர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
பலியான இந்தியர்களில் குறிப்பிடத்தகுந்தவர், சுன்னோவா அனலிட்டிகல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுமந்தராவ் மரே பள்ளி ஆவார். அவர் நியூஜெர்சியின் எடிசன் நகரில் மரணம் அடைந்தார்.
அவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.
நியூஜெர்சி நகரத்தில் உள்ள இந்திய சதுக்கத்தில் பிரபலமான சந்திரகாந்த் அமின், தனது 75-வது வயதில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நியூஜெர்சியில் வீட்டுக்குள் ஒரு இந்திய வம்சாவளி இறந்து கிடந்ததும் தெரியவந்தது.
நியூஜெர்சியில் 400 இந்திய வம்சாவளியினரும், நியூயார்க்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.
நியூயார்க்கில் உள்ள இந்திய வம்சாவளி கார் டிரைவர்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல சமூக தலைவர்களையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.
நியூயார்க், நியூஜெர்சி பகுதியில் 12 இந்தியர்கள் பலியாகி இருப்பதாகவும், இதற்கு முன்னர் இப்படி ஒரு துயர நிகழ்வை பார்த்தது கிடையாது எனவும் நியூஜெர்சி மாகாணத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிற இந்தியர் பாவேஷ் தவே தெரிவித்தார். இவர் முககவசங்கள் வழங்குவதற்கு நிதி திரட்டி வருகிறார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கிய இந்தியர்களையும், இந்திய வம்சாவளியினரையும் காப்பாற்ற பிளாஸ்மா என்று அழைக்கப்படக்கூடிய ரத்த அணுக்களை ஏந்தி செல்லும் நிறமற்ற திரவம் தேவைப்படுகிறதாம்.
இதை தானமாக வழங்க கோரி சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.
ஜெர்சி நகரில் ரசிக் பட்டேல் என்ற 60 வயது இந்திய வம்சாவளி முதியவருக்கு 2 நாட்களுக்கு முன்னர் செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் நிலைமை மோசமாகி உள்ளது. இது அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாதிப்புக்குள்ளாகி உள்ள இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் பல தரப்பிலும் உதவும் கரங்கள் நீண்டுள்ளன.
நியூஜெர்சி மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்களுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜித், சச்சின், சஞ்சய்மோடி உள்ளிட்டோர் இலவச சைவ உணவு வழங்கி வருகின்றனர்.
நியூயார்க், நியூஜெர்சி, மேரிலாந்து, புளோரிடா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து இலவசமாக உணவுகள் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
பாஸ்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கு உலக இந்து கவுன்சிலின் அமெரிக்க கிளை உணவு அளித்து வருகிறது. உள்ளூர் போலீசாருக்கு 85 ஆயிரம் கையுறைகளையும் அந்த அமைப்பு வழங்கி உள்ளது.
இப்போது அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் உள்ள ஒரே ஆறுதல், இந்த நெருக்கடியான தருணங்களில் பல தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீளுவதுதான்.