விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நுவரெலியா மற்றும் தம்புள்ளை விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இதற்காக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்ட செயலாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வசமுள்ள அனைத்து மரக்கறிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
தம்புள்ளை பகுதியில் 25 முதல் 30 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகளையும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 3 முதல் 5 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகளையும் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இந்த மரக்கறிகளை இராணுவத்தினர், மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் அந்தந்த பகுதி மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது.