மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவத்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
சுகாதாரத் திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டடம் ஆகியவற்றுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவிக்கையில், “காத்தான்குடி கடற்கரை வீதியில் அமையப்பெற்றுள்ள காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக உள்வாங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கிவந்த வெளிநோயாளர் பிரிவு, குழந்தை பிரசவ விடுதி மற்றும் கிளினிக் ஆகிய சேவைகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டடம் ஆகியவற்றுக்கு தற்காலிகமாக மாற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன. காத்தான்குடி நகரசபை இந்தக் கட்டடங்களை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
குருதி சுத்திகரிப்பு பிரிவு மற்றும் உள நல மருத்துவப்பிரிவு என்பனவும் நிர்வாக நடவடிக்கையும் தொடர்ந்து காத்தான்குடி வைத்தியசாலைக் கட்டடத்திலேயே இயங்குமென காத்தான்குடி ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் வைத்தியர்கள், ஊழியர்கள், நகர சபை ஊழியர்கள் இதனை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.