புத்தளம் நகரில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் குணமடைந்தார்

301 0

புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட கடையான்குளம் பகுதியில் முதன் முதலாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவிற்கு சென்ற குறித்த நபர், மார்ச் மாதம் 16ஆம் திகதி புத்தளத்திற்கு வந்த நிலையில், சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் படி அவர் 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

அவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் போது மார்ச் மாதம் 28 திகதி சுகவீனம் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் , மேலதிக பரிசோதனைக்காக அன்றைய தினமே குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் பூரணமாக குணமடைந்து நேற்று வெள்ளிக்கிழமை (10) வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறு வீட்டுக்கு வருகை தந்துள்ள குறித்த நபரை, மேலும் 14 நாட்களுக்கு வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக புத்தளம் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் என்.சுரேஷ் தெரிவித்தார்.

புத்தளம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதுடன், அதில் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளார் எனவும் அவர் ௯றினார்.

அத்துடன், புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தற்போது 82 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.