கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவரை வீட்டில் பராமரிப்பது எப்படி?- தமிழக அரசு விளக்கம்

337 0

கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவரை வீட்டில் பராமரிப்பது எப்படி? என்பது பற்றிய விளக்கத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடு அல்லது வேறு மாநிலங்களில் இருந்து திரும்பிய ஒரு நபர் அல்லது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரிடம் உடன் இருந்தவர்கள், பிறருக்கு நோய்க்கிருமி பரவுவதைத் தடுக்க சமுதாயத்திலிருந்து தன்னை விலக்கி வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டு சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதையே வீட்டில் தனிமைப்படுத்தி இருத்தல் என்று அழைக்கிறோம்.

* தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.

* வீட்டிற்குள்ளும் அங்குமிங்கும் செல்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும். வீட்டில் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு பராமரிப்பு பணிகளை செய்தல் வேண்டும். பராமரிப்புப் பணி செய்பவரும் தவறாமல் முகக்கவசமும், கையுறையும் அணிந்திருக்க வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல், முககவசம் மற்றும் கையுறை அணிந்து தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.

* முககவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு உபயோகித்து கழுவ வேண்டும். வீட்டில் வயதானோர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தனிமைப்படுத்தபட்டவருடன் எவ்வித தொடர்பும் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்டவருக்கு, காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனே 104 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 120 555550-ல் ஆலோசனை பெறலாம். அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

* அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களையும் அடுத்த 28 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். வீட்டை தினமும் 3 முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொருவரின் நலம்பேணுவதற்கான அரசின் அறிவுறுத்தல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், 24 மணி நேர உதவி எண்களான 104, 1077, தொலைபேசி 044 2951 0400, 044 2951 0500, கைபேசி 94443 40496, 87544 48477 ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு பேசலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.