கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ‘ஒபெக்’ கூட்டமைப்பு முடிவு

388 0

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ‘ஒபெக்’ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது.

உலகெங்கிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலும் விமானங்கள் ஓய்வு எடுத்து வருகின்றன.

அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தவிர்த்து, மற்ற ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை 60 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.

எனவே கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

இதனை சரிசெய்ய உற்பத்தியை குறைப்பது மட்டுமே ஒரே வழி என கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கருதின. சவுதி அரேபியாவும், ரஷியாவும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமான நாடுகள் ஆகும்.

எனவே உற்பத்தியை குறைப்பது தொடர்பாக சவுதி அரேபியா தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என்று ரஷியா அறிவித்ததே இதற்கு காரணம் ஆகும்.

ரஷியாவின் இந்த முடிவு சவுதி அரேபியாவுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. ரஷியாவின் வழியிலேயே சென்று அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாமும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக சவுதி அரேபியா அறிவித்தது.

சவுதி அரேபியா-ரஷியா இடையேயான உற்பத்தி போட்டி காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது. இது கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தும் என பிற உற்பத்தி நாடுகள் கவலை தெரிவித்தன.

இந்த நிலையில் ‘ஒபெக்’ மற்றும் அதன் கூட்டணி நாடுகள், நேற்று முன்தினம் இரவு காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தின. இதில் உற்பத்தியை குறைக்கும் விவகாரத்தில் ரஷியா மற்றும் சவுதி அரேபியா இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, நேற்று காலை நடந்தது. இறுதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ரஷியா ஒப்புக்கொண்டது. அதன்படி, வரும் ஜூலை மாதம் வரை நாள் ஒன்றுக்கு, ஒரு கோடி பீப் பாய் (ஒரு பீப்பாய் 158.9 லிட்டர்) அளவிற்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஜூலை மாதத்துக்கு பிறகு ஆண்டு இறுதி வரை நாள் ஒன்றுக்கு 80 லட்சம் பீப்பாய்களும், 2021-ம் ஆண்டு முதல் அடுத்த 16 மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு 60 லட்சம் பீப்பாய்களும் உற்பத்தியை குறைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் ஒரு கோடி பீப்பாய் உற்பத்தி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையில் இருந்து மெக்சிகோ வெளியேறியது. எனினும் மெக்சிகோ ஒப்புதல் அளித்தால் மட்டுமே உற்பத்தி குறைப்பு நடவடிக்கை அமலுக்கு வரும் என சவுதி அரேபியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆனால் மெக்சிகோ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைக்கு மெக்சிகோ ஒப்புதல் அளிக்கும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன்படி கச்சா எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு ஒரு கோடி பீப்பாய் அளவில் குறைக்கப்படும் பட்சத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது.