அசாதாரண நிலையினைக் கையாள அரசாங்கம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

297 0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினை கருத்திற்கொண்டு அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பிரசன்னத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயம் விவாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், “கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து நாட்டில் நிலவும் உணவு தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகள் மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தவதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள இந்த விசேட அறிக்கையில், நாட்டின் அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டும் உணவு உற்பத்தியில் நெல் உற்பத்தியின் அவசியம், மற்றும் களஞ்சியப்படுத்தல் என்பவற்றையும் மக்களின் தேவையையும் கருத்தில் கொண்டும் நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொவிட் 19 தனிமைப்படுதல் செயற்பாடுகளில் முன்னேடுக்கப்படவேண்டிய சேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் அனைத்து நெல் ஆலைகளும் திறக்கப்பட்டு நாட்டின் தேசிய நெல் உற்பத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

அத்துடன், சிறிய நெல் ஆலையாளர்கள் பிரதேச செயலக அதிகார பிரிவுக்குள்ளும், நடுத்தர நெல் ஆலையாளர்கள் மாவட்ட அதிகார பிரிவுக்குள்ளும், பாரிய அளவிலான நெல் ஆலையாலர்கள் நாடு பூராகவும் தமது நெல் உற்பத்திகளை பகிர்ந்தளிக்க முடியும் எனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.