மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது பாட்டி

368 0

ஜெர்மனியில் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஊரடங்கை மீறி முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிய 101 வயது பாட்டிக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.கொரோனா வைரசின் தாக்குதலை முறியடிக்கும் விதமாக உலகின் பெரும்பாலான நாடுகள், மக்கள் வீட்டை விட்டு வெளியே நடமாட இயலாத வகையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.ஜெர்மனி நாட்டிலும் இதுபோல் கொரோனாவுக்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை காணப்படுகிறது.

இந்தசூழலில், அங்குள்ள புருன்ஸ்விக் நகரில் முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ள 101 வயது ‘குடுகுடு’ பாட்டி ஒருவருக்கு புறநகர் பகுதியில் வசிக்கும் தனது மகளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

‘இதைச்சொன்னால் நம்மை வெளியே விடமாட்டார்கள்’ எனக் கருதிய அவர், நள்ளிரவில் முதியோர் இல்லத்தின் அவசர வெளியேறும் வழியாக யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நைசாக தப்பிச் சென்றார்.

ஆனால், இரவு நேரம் என்பதால் எந்த வழியாக மகள் வீட்டுக்கு செல்வது எனத் தெரியாமல் தடுமாறினார்.

அப்போது அந்த வழியாக காரில் ரோந்து வந்த போலீசார் அவர் பரிதவிப்பதை பார்த்து தீவிரமாக விசாரித்தனர்.

அப்போதும் கூட, தான் முதியோர் இல்லத்தில் இருந்து ரகசியமாக வெளியேறியது பற்றி எதுவும் கூறாமல் ‘மகள் வீட்டில் இருந்து வந்தபோது வழி தவறி விட்டேன்’ என்று அந்த பாட்டி புளுகினார்.

அதை போலீசார் நம்பவில்லை. எனினும் அவருக்கு உதவினர்.

சில மணி நேரங்களுக்கு பின்பு ஒரு வழியாக அவருடைய மகளின் முகவரியை தேடிக்கண்டுபிடித்து அவரிடம் நடந்ததை கூறினர்.

அப்போதுதான், தனது தாயார் போலீசாரிடம் பொய் சொல்லியிருப்பது மகளுக்கு தெரியவந்தது. போலீசாரிடம் அவர், “எனது தாயாரை 2 வாரங்களுக்கு முன்புதான் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டேன். இன்று எனது பிறந்தநாள் என்பதால் வாழ்த்து தெரிவிக்க தப்பி வந்து இருக்கிறார்” என உண்மையை போட்டு உடைத்தார்.

அதைக்கேட்ட போலீசாருக்கு மயக்கம் வராத குறைதான். எனினும் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து முடித்தவுடன் பாட்டியை, ரோந்து போலீசார் மீண்டும் முதியோர் இல்லத்திலேயே பத்திரமாக கொண்டுபோய் விட்டனர்.

“அவசியமான நேரங்களில் அழைத்தால் நாங்களே மகள் வீட்டுக்கு ரோந்து காரில் அழைத்து சென்று மறுபடியும் முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து விடுகிறோம். ஊரடங்கு நேரத்தில் இதுபோல் செய்யாதீர்கள். கொரோனா அபாயம் வேறு நிறைய இருக்கிறது” என்று போலீசார் அறிவுரையும் வழங்கினர்.

அப்பாடா, இதுபோன்ற ‘அண்டப்புளுகு’ பாட்டிகளை போலீஸ் எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டி இருக்கிறது!