மாவட்டங்களை ஊடறுத்து பயணிப்போருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எச்சரிக்கை!

276 0

நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வோர் இன்று முதல் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறிய நிலையில் கைதாவோர் உரிய தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் வரை குறித்த கண்காணிப்பு நிலையங்களில் வைத்திருக்கப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தில் இடம்பெற்ற ஊடகவியளார் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதனிடையே இன்று காலை 6 மணி முதல் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அங்கு ; எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் தலிமையகம் தெரிவித்தது.

எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடரும் என பொலிஸ் தலைமையகம் கூறியது.

இதனிடையே, ஜா -எல சுதுவெல்ல பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறிய 23 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். புலனாய்வு நடவடிக்கையினூடாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இந் நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 23 பேரும் முதலில் பிரதேசத்தின் தேவாலயம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கடற்படையினரால் ஒலுவில் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஜா எல பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால், அவரை சந்தித்த சிலர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 23 பேரே விதிமுறைகளை மீறி நடமாடியதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய அவர்கள் கைதுசெய்யப்பட்டு இவ்வாறு தனிமைபப்டுத்தல் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாக கடற்படையினர் கூறினர்.