துரதிஸ்டவசமாக சில தவிர்த்திருக்கக்கூடிய இறப்புகளும் ஏற்பட்டுள்ளன!

404 0

“வடமாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் தற்போதைய காலகட்டத்தில் இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் நிலைகள் மற்றும் ஆஸ்மா போன்ற சுவாசத் தொகுதி நோய் உடையவர்கள் இந்நோய் நிலைமைகள் தீவிரமடைந்து அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்ற போதும் உரிய நேரத்தில் வைத்தியசாலைகளுக்கு வருகைதராதிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி நோயாளர்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கு அம்புலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்வதில் சில தாமதங்கள் ஏற்பட்டதையும் அறிய முடிகின்றது. இதனால் கடந்த சில நாட்களில் துரதிஸ்டவசமாக சில தவிர்த்திருக்கக்கூடிய இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.”

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்படி தொற்றா நோயினையுடைய நோயாளர்கள் தமது நோய்நிலை தீவிரமடைகின்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக 1990 என்கின்ற அவசர அம்புலன்ஸ் இலக்கத்தை தொடர்புகொண்டு வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.

இவ் அம்புலன்ஸ் சேவையினை பெற்றுக் கொள்வதில் ஏதாவது தடங்கல்கள் அல்லது தாமதங்கள் இருப்பின் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பு எண்களான 021-2226666, 021-2217982 ஆகியவற்றுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள். அவர்களுக்கான அவசர அம்புலன்ஸ் சேவை எம்மால் ஒழுங்கு செய்யப்படும். – என்றும் அவர் தெரிவித்தார்.