தமிழர் பகுதிகளை பிக்குகள் பௌத்தமயமாக்க முயற்சி-சீனித்தம்பி யோகேஸ்வரன்

336 0

yokeswaranகடந்த அரசாங்கத்தைப் போன்றே நல்லாட்சி அரசாங்கத்திலும் பௌத்த பிக்குகள் தமிழர் பகுதிகளை பௌத்தமயமாக்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முன்நின்று செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது நடவடிக்கை உடனடியாக நிறுத்துவதற்காக நீதிமன்றம் சென்று, சட்டத்தின் முன் நீதியைப் பெறுவதற்கு தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையான பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கச்சைக்கொடி கிராமத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்பான்மையினக் குடியேற்ற முயற்சிகளைத் தடுக்கச் சென்றிருந்த பிரதேச செயலாளர், கிராம சேவை அலுவலர், காணி அதிகாரி உட்பட அதிகாரிகளுக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், சிவில் அதிகாரிகள் மீது தொடர்ந்தும் விடுத்துவரும் அச்சுறுத்தல்களுக்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடருமானால் அதிகாரிகளினால் சிவில் நிர்வாகத்தை முன்னெடுக் முடியாத நிலையே எற்படும் என்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெற்ற பெங்குதமிழ் பேரணிகளில் கூட கலந்துகொண்ட குறித்த தேரர், ஒவ்வொரு அரசியலிலும் மாறிமாறி தன்னை இனங்காட்டுபவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு பௌத்த மக்கள் இல்லாத சாம்பல் தீவு சந்தியில் பௌத்த சிலை வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இதேபோன்று வாகரைப் பிரதேசத்திலுள்ள காயான்கேணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு காணி கேட்கிறார். இதற்கான எதிர்பையும் ஆட்சேபனைனையும் தெரிவித்துள்ளோம்.

சில நாட்களுக்கு முன்பு அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த சிலை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஜனாதிபதி பிரதமர் என உரிய தரப்பினரிடம் கொண்டு சென்றாலும் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசு நடவடிக்கையெடுத்ததும் இல்லை. எடுக்கப் போவதும் இல்லை இதுதான் யதார்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகலை ஏற்படும் வகையில் செயற்படும் சுமனரத்ன தோரரை இந்த மாவட்டத்தைவிட்டு வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு மதவிவகார அமைச்சரைக் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பௌத்த பிக்கு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் அத்தனையும் மேற்கொள்வோம். தொடர்ந்தும் இந்த பிக்குவின் தேவையற்ற நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

சட்டவிரோத குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் குறித்த பிக்குவே முன்நின்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். இவரது நடவடிக்கை உடனடியாக நிறுத்துவதற்கு நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடவுள்ளதாகவும் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.