மேற்காசிய நாடான ஈரான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் கடுமையாக போராடிக்கொண்டிரும்கின்ற இந்த நேரத்தில் கூட, அதற்கு எதிரான தடைகளை தளர்த்துவதற்கு மறுத்த அமெரிக்காவின் செயல் மனிதாபிமான நெருக்கடிச் சூழ்நிலை முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதாக இருக்கிறது. மேற்காசியாவில் ஈரானிய இஸ்லாமிய குடியரசே வைரஸ் தொற்றுநோயினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்ட்டிருக்கும் நாடாகும். ஏற்கெனவே அங்கு 3,739 பேர் மரணமடைந்திருப்பதுடன் 62,589 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது.
இந்த போராட்டத்தில் ஈரான் பல முனைகளில் தோற்றுவிட்டது என்பதே உண்மையாகும். வர்த்தக நிறுவனங்கள், மத நிறுவனங்கள் மற்றும் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தொடக்கத்தில் தயங்கியது. வைரஸ் கடுமையான வேகத்தில் பரவத்தொடங்கியதும் அது ஈரானின் சுகாதாரப் பராமரிப்பு முறையினால் கையாள முடியாத நிலையை எட்டிவிட்டது. இந்த நெருக்கடியின்போது மக்களின் தேவைகளை நிறைவேற்ற பணத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அரசாங்கம் பெரும் கஷ்டப்பட்டது.ஆனால், அமெரிக்காவின் தடைகள் இந்த இடர்நிலையை மேலும் மோசமாக்கியது.
ஈரானிய அணு உடன்படிக்கையில் இருந்த 2018 ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டபிறகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த வருடம் மீள விதிக்கப்பட்ட தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை 8.7 சதவீதத்தினால் சுருங்கச்செய்துவிட்டது. எண்ணெய் விலைகளில் வீழ்ச்சியும் உலகளாவிய தொற்றுநோயும் ஈரானின் கவலைகளை பல மடங்காக அதிகரிகரிக்கச் செய்திருக்கின்றன. இந்த தடைகள் மனிதாபிமானப் பொருட்களையேனும் இறக்குமதி செய்வதில் ஈரானுக்கு இருந்த ஆற்றலையும் வலுக்கெடச்செய்துவிட்டது.
தடைகளை தளர்த்துமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நிராகரித்த அமெரிக்கா, இந்த பொருட்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஏற்கெனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியது.ஆனால், அவ்வாறு செய்வது அவ்வளவு இலகுவானதல்ல. அமெரிக்காவின் பதிலடிக்கும் சட்டரீதியான விளைவுகளுக்கும் அஞ்சுகின்ற உலகின் பெரும்பாலான வங்கிகள் ஈரானுடன் கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதில் இருந்து விலகியிருக்கின்றன. இதனால் நடைமுறைசார்ந்த கொடுப்பனவு பொறிமுறையொன்றைக் கண்டுபிடிப்பது இஸ்லாமிய குடியரசுக்கு கஷ்டமானதாக இருக்கிறது. பொருளாதாரம் பெரும் இடர்பாட்டுக்குள்ளாகியிருக்கும் நிலையில், கொள்வனவுகளைச் செய்வதற்கு ஈரானிடம் வளங்களும் இல்லை.
கொவிட் — 19 கொரோனாவைரஸின் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையை மிகவும் அதிகமாகக் கொண்டிருக்கும் நாடான அமெரிக்காவினால் ஈரானின் கவலைகளை வேறு எந்தவொரு நாட்டையும் விட கூடுதலாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும். அமெரிக்காவில் வைரஸ் பரவலினால் ஏற்கெனவே 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்ததுடன் 370,000 க்கும் அதிகமானவர்களக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருப்பதுடன் பிரமாண்டமான சுகாதாரப்பராமரிப்பு தொழில்துறையையும் கொண்டிருக்கின்ற போதிலும் கூட வைரஸை துரிதமாகக் கட்டுப்படுத்துவதற்கான வழி தெரியாதவர்களாக அதிகாரிகள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
சொந்த அனுபவத்தில் இருந்து பாடத்தைக்கற்றுக்கொண்டு வாஷிங்டன், கட்டுப்பாடுகளின்றி உணவுப்பொருடகள், மருந்து வகைகள் மற்றும் ஏனைய மனிதாபிமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஈரானை அனுமதிக்குமுகமாக தடைகளை இடைநிறுத்தியிருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை தளர்த்தியாவது இருக்கவேண்டும். அத்தகையதொரு தீர்மானம் இவ்வருட ஆரம்பத்தில் இராணுவ மோதல் ஒன்றின் விளிம்பில் இருந்த இரு நாடுகளும் இராஜதந்திர ஊடாட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கும்.மனிதாபிமானத் தீர்மானமொன்றை எடுத்து அதை ஒரு இராஜதந்திர நல்வாய்ப்பாக மாற்றுவதற்கு ட்ரம்புக்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.அமெரிக்காவைத் தூற்றிக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல என்பதை ஈரானிய தலைவர்களும் விளங்கிக்கொள்ளவேண்டும்
உலகளாவிய ரீதியில் இது ஒரு நெருக்கடியான தருணமாகும்.வெளிநாடுகளில் இருந்து கூடுதல்பட்ச உதவியைப் பெற்று ஈரானியர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதிலேயே தெஹ்ரான் கவனத்தைக் குவிக்கவேண்டும்.எந்தவகையான நெருக்கடியையும் சவால்களையும் வெற்றிகொள்வதற்கான வல்லமை ஈரானிடம் இருக்கிறது என்ற அதியுயர் தலைவர் அயத்தொல்லா காமெனியின் அண்மைய கருத்து யதார்த்த நிலையில் இருந்து விலகியதாகவே இருக்கிறது.ஈரானியர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.அமெரிக்கா, — உலகம் பூராவும் வைரஸ் தொற்றுநோயினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது — ஈரானியர்களைத் தண்டிக்கும் அதன் கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
( த இந்து )