கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற இளைஞருக்கு டெங்கு காய்ச்சல்

267 0

கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நோய்அறிகுறியுடன் வருபவர்களின் ரத்த, சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உடனே பரிசோதனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கரூர் திரும்பிய ஒரு இளைஞருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது.

உடனே அவரை உறவினர்கள் கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொரோனா பீதியில் அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. இதையடுத்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அந்த இளைஞரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காய்ச்சல் நின்று குணமடைந்துவிட்டார். இருப்பினும் மருத்துவ கண்காணிப்பில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவ கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா கூறியுள்ளார்.

மேலும் பெங்களூரில் இருந்து கரூர் வந்து பின்னர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இன்னொருவரையும் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ரத்த பரிசோதனை செய்தவர்களுக்கு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

நேற்று 6 பேருக்கு ரிசல்ட் வந்தது. அதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் தோகைமலையை சேர்ந்த ஒருவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற 22 பேருக்கும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் யாரும் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.