நிவாரணம் வழங்கும் போது வேட்பாளர்களை பிரபலப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை பிரபலப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
தேர்தல் காலப்பகுதி என்பதாலும் நாடு ஆபத்தை எதிர்கொண்டுள்ள தருணம் என்பதாலும் தேர்தல்கள் ஆணைக்குழு மீது சுமத்தப்படுகின்ற ஆதாரமற்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.
விமர்சிப்பவர்களுக்கு அதே பாணியில் என்னால் பதிலளிக்க முடியாது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளுடன் அரசியல்வாதிகள் தொடர்புபடக் கூடாது என ஒருபோதும் கூறவில்லை.
எனினும், இந்த நிவாரணப் பணிகள் ஊடாக அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களது கட்சிகள் பிரபலப்படுத்தப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
தேர்தல் காலப்பகுதி என்பதால் மாத்திரம் அல்லாது ஒழுக்கமுள்ள நாட்டில் வழமையான காலப் பகுதியில் கூட அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது.
தேர்தல்கள் ஆணைக்குழு எவருக்கும் சார்பாக செயற்படவில்லை. மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் மாத்திரம் ஆணைக்குழு சார்பாக செயற்படுகின்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.