மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது எனவே உணவு இல்லாமல் ஒரு உயிர் இறந்தால் கூட அதற்கு முழுப் பொறுப்பும் அரசாங்க அதிபரே கூறவேண்டும் என இலங்கை மக்கள் தேசியக் கட்சி தலைவர் நாகராசா விஷ;னுகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று மனிதருக்குள் இருப்பதா இல்லையா என்பதை பரிசோதிப்பதற்கு 5 அல்லது 6 மணித்தியாலயங்கள் தேவைப்படுகின்றது. ஆனால் ஜரோப்பிய நாடுகளில் குறுகிய நேரத்தில் பரிசோதிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.
அந்தமுறையை டென்மார்க்கில் இருக்கின்ற எமது கட்சியின் அமைப்புக்கள் இந்த பொருட்களைதரமுன் வந்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் அல்விஸ்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் அதனை வரவேற்றதுடன் இதைவிட வேறு பொருட்கள் தேவைப்படுவதாக கோரியுள்ளதுடன் அதனை படித்துவிட்டு அதற்கான சகல ஏற்பாடுகளைச் செய்வதாக தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது உணவுத் தட்டுபாடு ஏற்பட்டிருக்கின்றது. ஏன் என்றால் 10 அல்லது 15 நாட்களுக்கு முன்கூட்டியே இப்படி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க போகின்றோம் எனத் தெரிவித்திருந்தால் மக்கள் ஏதாவது செய்திருப்பார்கள்.
ஆனால் இன்று ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பொருட்கள் வாங்குவதற்கு நிற்கின்ற மக்களைவிட நகை அடைவுக் கடைகளில் அடைவுவைக்கும் மக்கள் அதிகமாக இருக்கின்றார்கள். ஏனென்றால் மக்களின் கைகளில் பணம் இல்லை. உணவுத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் சமுர்த்தி வழங்கியிருக்கின்றது. ஆனால் இன்னமும் சிலருக்கு சமுர்த்தி கிடைக்கப்படவில்லை. ஒரு சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இந்த சமுர்த்தி பணத்தில் இருந்து எடுக்கப்பட்ட கடன்களை கழித்து வழங்கியுள்ளனர். அவ்வாறே அரச ஊழியர்களின் சம்பளத்தில் கடன்களை வெட்டக்கூடாது என ஜனாதிபதி அறிவித்தாலும் அரச ஊழியர்களின் கடன் இருப்பதால் சம்பளம் தரமுடியாது என பல்வேறுபட்ட பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், முழு அதிகாரமும் அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவை என்பதை அரசாங்க அதிபர்தான் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது. எனவே அரசாங்க அதிபர்தான் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து மக்களுடைய உயிருக்கு உத்தரவாம் வழங்க வேண்டியவர்” என அவர் தெரிவித்தார்.