வட மாகாண மக்களின் அவரச தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை

291 0

ஊரடங்கு காலகட்டத்தில் வட மாகாண மக்களுக்கு எழும் அவரச தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முதன்மை செயலாளர்களுக்கு அவரப்பி எழுதியுள்ள கடிதத்தில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் எழுந்துள்ள விடயங்கள் எமது மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் கையாளுகின்ற முறை பற்றி எந்த விமர்சனத்தையும் நான் முன்வைக்க விரும்பவில்லை.
ஆனால் சில ஊடகச் செய்திகளின் படி சில அரசியல்வாதிகள் அரச அலுவலர்களது செயற்பாடுகளில் தலையீடு செய்வதான நிலை கண்டிக்கத்தக்கது.

அவ்வாறன நிலைகளை தவிர்த்து அரசாங்க அலுவலர்கள் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை தங்கள் ஊடாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களை மட்டும் அமுல்செய்வதையும் பாதிப்புக்குள்ளானோருக்கு உதவ விரும்புபவர்கள் தங்களிடம் வழங்கும் பொருட்கள் அல்லது நிதி தங்களுடைய பணிப்பிற்கமைய நிறைவேற்றப்படுவதையும் வேறெந்த அரசியல்வாதியும் அவற்றில் தலையீடு செய்யாதிருப்பதை உறுதி செய்யுமாறும், அவ்வாறான நெருக்குதல் அலுவலர்களுக்கு ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தங்களுடையது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஜனாதிபதியினுடைய பணிப்பின் பேரில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் இன்னும் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது.
அவ்வாறான நிலையை சீர்செய்து சகல நிவாரண உதவிகளும் எல்லோரையும் சென்றடைவதை மீளாய்வு முறையில் உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாது ஏனைய பொருட்களையும் மக்கள் சிரமமின்றி பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைள் உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டும்.

எமது பிரதேச வர்த்தகர்கள் தம்மால் இயன்ற சேவைகளை வழங்குகின்றபோதும் அவற்றில் காணப்படும் குறைபாடுகள் அல்லது போதாமை தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
யுத்தகாலத்தில் கூடுதலாக நிவாரண விநியோகங்களில் கூட்டுறவுத் துறை ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

ஆனால் தற்பொழுது முழுமையாகச் செயற்படுவதற்கான நிதி வசதி இல்லாமை ஒரு பிரச்சினையாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்குகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. ஆகவே இச்சங்கங்களின் நிர்வாக இயலுமையைப் பரிசீலித்து அவர்களுக்கான போதிய கடன் வசதிகளை வழங்கி அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் அவற்றை ஈடுபடுத்தலாம் என்பதை

தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பாக உணவுப் பொருட்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலையில் – அதனால் விலை அதிகரிப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகும்.

எனவே போதிய நெல் கொள்வனவை மேற்கொண்டு உள்ளுரில் இருக்கக் கூடிய அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தியை மேற்கொள்வதற்கும் இச்சங்கங்கள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.