ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு பொலிஸ் நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடுவது கொரோனா ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஊரடங்கு உரிமங்களை நான்கு வழிகளில் வழங்க பொலிஸ் தலைமையகம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்கப்படும்.
மேல் மாகாணத்தின் கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடர்பான அனுமதி பத்திரத்தை வழங்கும் அதிகாரம் மேல் மாகாண சிரஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் வழங்கப்படும்.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு அனுமதி பத்திரம் மாகாணத்திற்கு பொறுப்பான மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் வழங்கப்படும்.
ஒவ்வொரு பகுதியிலும் 10 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மற்றும் 50 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கான பொறுப்பு தொகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகங்களின் ஊடாக வழங்கப்படும்.
மேலும் 10 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு அந்தந்த பொலிஸ் நிலையங்களால் அனுமதி பத்திரஙங்கள் வழங்கப்படும்.
அதேபோல் மனிதாபிமான ரீதியில் அனுமதி பத்திரங்களை வழங்க பொலிஸ் நிலையங்களுக்கும் அனுமதி உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிதம அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் அதிகார சபை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் சேவையை முன்னெடுக்க தமது நிறுவன அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்.
இருப்பினும், எந்தவொரு தேவையும் இல்லாமல் தங்கள் நிறுவன அடையாள அட்டைகளை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரங்களை வழங்குவது தொடர்பான புதிய நடைமுறைகளைக் கொண்ட சுற்றறிக்கை www.police.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.