முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.79.74 கோடி: தமிழக அரசு தகவல்

347 0

கொரோனா நிவாரண பணிகளுக்காக இதுவரை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.79.74 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நோய் தொற்றை சமாளிப்பதற்கான பணிகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனமுவந்து நன்கொடை அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கிணங்க, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மக்களிடமிருந்து 2-ந்தேதி வரை மொத்தம் 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் வரப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையிலான 4 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரம் வருமாறு:-

பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மெட்ஸ் நிறுவனம் ரூ.2.50 கோடி. கவின் கேர், டெல்பி டி.வி.எஸ். டெக்னாலஜிஸ், டைட்டன், எஸ்.பி.கே அன்டு கோ, லூகாஸ் டி.வி.எஸ் ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு கோடி ரூபாய்.

தமிழ்நாடு எஜுகேசனல் அன்டு மெடிக்கல் டிரஸ்ட் ரூ.30 லட்சம். ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் மற்றும் டி.ஏ.ஜி.ஆர்.ஓ.எஸ் கெமிக்கல் இந்தியா ஆகியவை தலா ரூ.25 லட்சம். டி.ஏ.ஜி.கார்ப்பரேசன் ரூ.20 லட்சம். அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் ரூ.11 லட்சம்.

ஹெரிட்டேஜ் புட்ஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சாப்டீயோன் இந்தியா, வெங்கடலெட்சுமி பேப்பர் அண்டு போர்டு, டிடிகே கன்ஸ்ட்ரக்சன், ஒளிரும் ஈரோடு பவுண்டே‌‌ஷன், சுதா ரகுநாதனின் சமுதாயா பவுண்டே‌‌ஷன் ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.10 லட்சம்.

இந்த 4 நாட்களில் மட்டும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் வரப்பெற்றுள்ளது. அந்தவகையில் இதுவரை பெறப்பட்ட‘மொத்தத் தொகை 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும். இந்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் முதல்-அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.