அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ அமெரிக்க பாதுகாப்பு துறை 40 ஆயிரம் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ செய்தித்தொடர்பாளர் ஜோனதன் ஹாப்மன் கூறியதாவது:-
40 ஆயிரம் ராணுவ வீரர்களில் 4 ஆயிரம் ராணுவ டாக்டர்களும் அடங்குவர். இதுதவிர, 15 ஆயிரம் ராணுவ என்ஜினீயர்களும் கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
அத்துடன், அமெரிக்க ராணுவம் 22 ஆஸ்பத்திரிகளை கட்டி உள்ளது. தேசிய பாதுகாப்பு படை, தனது 21 ஆயிரம் ஊழியர்களை கொரோனா தொடர்பான பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும், ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியில் நின்று பேசவேண்டும் என்று ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.