ஈகுவடார் நாட்டில் பரிதாபம்: கொரோனாவுக்கு பலியானவர்கள் உடலை வீதிகளில் வீசும் அவலம்

327 0

ஈகுவடார் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர் களே வீதிகளில் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக, அந்நாட்டின் துறைமுக நகரான குய்யாகு பெரிதும் பாதிப்பட்டுள்ளது. இந்நகரில் மட்டும் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டும் உள்ளது. அத்துடன் நகரில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வீடுகளில் இறந்தவர்களை கல்லறைக்கு உடனடியாக கொண்டு செல்லவும் இயலவில்லை. இறந்தவர்களை முறைப்படி அடக்கம் செய்யவும் முடியவில்லை.

இதனால், கொரோனா தாக்குதல் காரணமாக இறந்தவர்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் வீதியில் வீசி வருகின்றனர்.

இறந்தவர்கள் உடலை வீட்டின் வாசல் முன்பாக வைத்து அதை ஒரு போர்வையால் போர்த்திவிட்டு போய் விடுகிறார்கள்.

கடந்த 2 நாட்களில் மட்டும், இப்படி வைத்துவிட்டுப்போன 100 உடல்களை நகர துப்புரவு பணியாளர்கள் மீட்டு உள்ளனர். இதைவிடக் கொடுமையாக, உள்ளூர் ஆஸ்பத்திரி ஒன்றும் இறந்தவர் ஒருவரின் உடலை கொஞ்சமும் மனிதாபிமானமின்றி இதுபோல் தெருவில் வீசியது, தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, நகர நிர்வாகம், ‘வீடுகளில் இறப்பவர்களின் உடல்களை, தடித்த அட்டைகளை பெட்டியாக தயாரித்து அதற்குள் அடைத்து தெருவில் வையுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், உள்ளூர் ஆஸ்பத்திரிகளுக்கு அதிக உடல்களை சேகரித்து வைக்கும் வகையில் 40 அடி நீளம் கொண்ட இரும்பு பெட்டிகளையும் வழங்கி வருகிறது.