அமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது : ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள்- ராமதாஸ் வலியுறுத்தல்

258 0

அமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது எனவும் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

உலகின் அனைத்து நாடுகளும் அண்ணாந்து பார்க்கும் ஒரு நாடு உலகில் உண்டு என்றால் அது அமெரிக்கா தான். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தனிமனித சுதந்திரம் என அனைத்திலும் அது ஒரு கனவு தேசம். ஆனால் உலகின் அனைத்து நாடுகளும் ஒரு விஷயத்தில் நாம் அமெரிக்கா ஆகிவிடக்கூடாது என்று நடுங்கிக்கொண்டிருக்கின்றன. அது கொரோனா வைரஸ் பரவல் விவகாரம் தான். அந்த அளவுக்கு கொரோனா அமெரிக்காவை பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. அத்தனைக்கும் காரணம் அமெரிக்காவின் அலட்சியம்தான்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொடுவதற்கு முன்பாகவே 3 வாரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். அடுத்த 10 நாட்களில், அதாவது மார்ச் 24-ந் தேதி இரவு இந்தியாவில் 3 வார ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 519. இப்போது இந்தியாவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால், இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால், அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும். அதனால்தான் சொல்கிறேன். ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடியுங்கள். சில விஷயங்களை தியாகம் செய்யுங்கள். அடுத்த சில வாரங்களில் இந்தியா கொரோனா வைரசை வெற்றி கொள்ளும். நாடும் நலம் பெறும். தனித்திருப்போம். தவிர்த்திருப்போம். விழித்திருப்போம். வைரசை தடுப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.