மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

260 0

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய வகையிலான புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதில் ஆர்வம் காண்பிக்கும் பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவிக்குமாறும், அதற்கான நிதியுதவியை வழங்கத்தயாராக இருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவினால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த காலங்கில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் புத்தாக்க சிந்தனைகளும்இ புதிய கண்டுபிடிப்புக்களும் உருவாகும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று இப்போதும் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய வகையிலான புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதில் ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்வம் காட்டத்தொடங்கியிருக்கிறார்கள்.

எனவே அத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் அவர்களது பல்கலைக்கழகம் கல்வி நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் அதற்கான வரையறுக்கப்பட்ட  நிதியுதவியை வழங்கத்தயாராக இருக்கிறோம்.