கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி

449 0

இலங்கையின் கொரோனாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றபோதும் அடுத்துவரும் காலத்தின் எவ்வாறான நிலைமகள் இருக்கப்போகின்றது என்பதை கணிக்கமுடியாது. எனினும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வருவது உறுதியாக இருக்கின்றபோதும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை வரையறுக்க முடியாது என்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தான நிலைமைகள் எவ்வாறுள்ளன?

பதில்:– இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமாகி தற்போது வரையில் கிழக்கு மாகாணத்தி னைச் சேர்ந்த ஒருவருக்கே தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பிரித்தானியவிலிருந்து வருகை தந்திருந்த நிலையிலேயே தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவருடன் தொடர்புகளைப் பேணியவர்களாக அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேர் வரையிலானர்வகள் இருவாரங்களாக காண்காணிப்புக்குள்ளாக்கப்பட்ட போதும் அவர்களில் யாருக்கும் தொற்றுக்கான அடையாளங்கள் காணப்படவில்லை.

இதற்கு அடுத்தபடியாக புணானை முகாமில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர் அல்ல. இந்த இரண்டு நபர்களும் மருத்துவ சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட கிழக்கு மாகாண மக்கள் அச்சமான மனநிலையுடன் காணப்படுகின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இவ்வாறான மனநிலையுடன் காணப்படுகின்றார்கள். காரணம், வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பாக அபாய வலங்களாக உள்ள கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற பகுதிகளிலிருந்து சிலர் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதந்து அங்கு மறைந்து வாழ முற்படுகின்றார்கள்.

ஊரடங்கு உத்தரவால் இவ்வாறான முயற்சிகள் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் அண்மைய நாட்களில் கடல்வழியாக மட்டுமாவட்டத்திற்குள் உட்பிரவேசிப்பதற்கு வெளிமாட்டத்தினைச் சேர்ந்தவர்கள் முயற்சிகளை செய்துள்ளார்கள். இவர்கள் மட்டக்களப்பு கடற்பரப்பினை வந்தடைந்த நிலையில் சுகாதார அதிகாரிகள் அவர்களை கடற்கரையிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இவர்களை மாவட்டத்தினுள் உள்ளீர்ப்பதா இல்லையா, சட்ட ரீதியாக அது முடியுமா என்ற காரணங்களுக்கு அப்பால் இவ்வாறு வருகை தருபவர்களால் மட்டக்களப்பிலோ அல்லது கிழக்கிலோ கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற அச்ச நிலைதான் அதிகரிக்கின்றது.

இதனைவிட வருகை தந்தவார்களுக்கு தொற்று காணப்படுமாயின் அவர்களை பராமரிப்பதற்குரிய ஏற்பாடுகள் இதுவரையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகின்றது.

கேள்வி:- மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?

பதில்:- மட்டக்களப்பு வைத்தியசாலையில் ;கொவிட் பிரிவு என்ற பெயரில் தனியானதொரு அலகு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அலகின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருபவர்களின் அறிகுறிகளை அடிப்படையாக வைத்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றோம்.

குறிப்பாக, அவர்களின் சளி மாதிரிகளைப்பெற்று கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி பரிசோதனை முடிவுகளைப் பெற்று வருகின்றோம். இதுவரையில் சுமார் முப்பது பேர் வரையிலானர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதனைவிடவும் சுகாதார உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கண்காணிப்புக்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றார்கள்.

கேள்வி:- கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய கட்டமைப்புகளை மட்டு.வைத்தியசாலையில் உருவாக்குவதில் உள்ள தடைகள் என்ன?

பதில்: மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவதற்குரிய இயந்திரத்தொகுதியை மட்டக்களப்பிற்கு கொண்டுவருதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபோது அதற்கான பணியாற்தொகுதி மற்றும் இதர விடயங்களும் அவசியமாகின்றது.

தற்போதைய நிலைமையில் நாம் மாதிரிகளைப் பெற்று கண்டிக்கு அனுப்புகின்றோம். நான்கு மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்கின்றோம். இந்த நடைமுறையில் எவ்விதமான பிரச்சினைகளுக்கும் நாம் முகங்கொடுக்கவில்லை.

எனினும், மருத்தவப்பரிசோதனைக்கு அதிகளானவானர்களை உள்வாங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சு கரிசணை கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பில் பரிசோதனைக் கட்டமைப்பை அமைப்பதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் அதுகுறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

கேள்வி:- கிழக்கில் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதெனக் கொள்ளமுடியுமா?

பதில்:- கிழக்கில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், வெளிநாட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் போன்ற தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறான செயற்பாட்டால் தொற்றுக்குள்ளான ஒருவர் காணப்படுவாராயினும் பரவலடைவதற்கான ஏதுநிலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் நூறுபேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகின்றபோது சராசரியாக மூவரே வெகுவாக பாதிக்கப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன. எஞ்சிய 97பேருக்கு தொற்றுக் காணப்பட்டாலும் அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகமுள்ளன.

இதனைவிட, கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத நிலையில் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளவர்களும் இல்லாமலில்லை. கொழும்பு, யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்வர்களில் சிலருக்கு எவ்விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தியிருக்காத நிலையில் மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது சிலருக்கு தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே அறிகுறிகளை வெளிப்படுத்ததாவர்களுக்கும் தொற்றிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இத்தகைய நிலையில் எத்தனைபேர் சமுகத்தில் இருக்கின்றார்கள் என்று எம்மால் கூறமுடியாது.

எனினும், அவ்வாறு தொற்றிருப்பவர்களுக்கு இயல்பாகவே தொற்று நீங்குகின்ற நிலைமைகள் ஏற்படுகின்றபோது சமுகமட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியொன்று உருவாகுவதற்கான நிலைமைகள் ஏற்படுகின்றமை நன்மையான விடயமாகின்றது. இதன்மூலம் கொரோனாவினால் பாதிப்புக்குள்ளாகாத சமுகம் உருவாகின்றது.

மறுபக்கத்தில் அறிகுறிகளின்றி ஒருவருக்கு தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில் அவர் பல்வேறு நபர்களுடன் தொடர்புகளைப் பேணுவதால் பெருமளவானர்கள் பதிப்படைவதற்கான சந்தர்ப்பகளும் ஏற்படுகின்றன. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாகின்றது.

கேள்வி:- அறிகுறிகள் காணப்படாத நிலையில் தொற்றுக்குள்ளாகியிருப்பவர்களை கையாள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் அவசியமாகின்றன?

பதில்:- மேற்குலநாடுகளில் அனைத்துப்பிரஜைகளுக்கும் கொரோனா தொற்றுக் குறித்த மருத்தவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமற்றதாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் சுகாதார அமைச்சானது, கொரோனா தொற்றுக்குறித்த பரிசோதனைகளை அந்தந்த பகுதிகளில் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக அதிகளவானவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன்போது சந்தேகத்திற்குள்ளானவர்களை உடன் தனிமைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இதனால் கணிசமான வைரஸ் பரவலை கட்டப்படுத்த முடியும்.

கேள்வி:  கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டவர்கள் அல்லது தற்போது தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடந்தும் தம்மை மறைத்துக்கொண்டிருக்கும் மனநிலையைக் கொண்டிருக்கின்றார்களே?

பதில்:- கடந்த காலத்தில் எயிட்ஸ் தொற்று இருக்கின்றமைக்கான மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கோ அல்லது தொற்றிருக்கின்றமையை வெளிப்படுத்துவதற்கோ தயக்கங்களைக் கொண்டிருந்தார்கள். அதுபோலவே கொரோனா விடயத்திலும் தம்மை வெளிப்படுத்தினால் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் போன்று அடையாளப்படுத்தப்பட்டு விடுவோம் என்ற மன அச்சத்துடன் பலர் இருக்கின்றார்கள். ஆனால் பொதுமக்கள் தமது சமுகத்தினையும், எதிர்கால சந்ததியினரையும் கருத்திற்கொண்டு தயக்கங்களை தவிர்க்க வேண்டும். இந்த விடயத்தில் மறைத்து செயற்படுவதால் குறித்த நபர் உள்ளிட்ட அவர்சார்ந்த அனைவருக்குமே பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்ற புரிதலை முதலில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

மேலும், இந்த விடயத்தில் சுகாதார அமைச்சு வைத்தியர்களிடத்தில் புதியபொறுப்பை ஒப்படைத்துள்ளது. சாதாரணமாக காய்ச்சல், சளி, இருமலுடன் இருப்பவர்களிடத்தில் துருவித்துருவி கேள்விகளை கேட்டு அவர்களின் தொடர்புகள் குறித்த உறுதிப்பாடுகளை பெறவேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி சாதரணமாக ஆஸ்மா போன்ற நோய்களைக் கொண்டவர்களையும் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டிய நிலைமையும் உருவாகி வருகின்றது. இது கொரோனா இல்லாத மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்பட்டாலும் தற்போதைய சூழலில் அதனை தவிர்க்க முடியாதுள்ளது.

கேள்வி: கொரோனா தொற்றிலிருந்து முதற்கட்ட பாதுகாப்பிற்காக சமுக இடைவெளியைப் பேணுமாறு அறிவுத்தப்படுகின்றபோதும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போது மக்கள் ஒன்றுகூடுவதால் சவாலான நிலைமையொன்று உருவாகின்றதல்லவா?

பதில்:- ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தளர்த்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடிய சந்தர்ப்பங்களை காணக்கூடியதாக இருந்தது. இருப்பினும், அதற்கு அடுத்தபடியான சந்தர்ப்பங்களில் அதிகளவான பொதுமக்கள் சமுக இடைவெளியை பின்பற்றுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

மேலும் இலங்கைபோன்ற நாடுகளில் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படுமாகவிருந்தால் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களும் அதிகமாக இருக்கின்றன. தற்போதைய சூழலிலேயே அன்றாட சம்பளத்திற்கு தொழில்புரிவோரின் நிலைமைகள் மோசமாக உள்ளன.

அவ்வாறிருக்கையில், தொடர்ச்சியான ஊரடங்கு அமுலானது பரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். ஆகவே பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொள்கின்ற அதேநேரம் அவர்களின் வாழ்வாதார நலன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலாக்கப்படுகின்றபோது பட்டினி நிலைமைகள் தலைதூக்கினால் பொதுமக்களின் தேக ஆரோக்கியம் குன்றும். இது கொரோனாவின் தாக்கத்திற்கும் வழிவகுத்துவிடும்.

கேள்வி:-   முகக்கவசங்களை அணிவது தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகள் காணகப்படுகின்றதே?

பதில்:- முகக்கவசங்களை அணிவதால் நன்மையும் உள்ளதைப்போன்று தீமையும் உள்ளது. இருமல், தடிமன், உள்ளவர்கள் முகக்கவசங்களை அணிந்து கொள்வதால் அவர்களின் துணிக்கைகள் வெளிச்செல்வது தடுக்கப்படுகின்றது

இதனால் துணிக்கைளின் ஊடாக கொரோனா தொற்று பரவலடைவது தடுக்கப்படுகின்றது. அதேநேரம், முகக்கவசத்தினை அணிந்திருக்கும் ஒருவர் அதனை அடிக்கடி தொடுதல் அதன் பின்னர் உடலின் ஏனைய பகுதிகளை, பொருட்களை அதேகைகளால் தொடுதல் போன்ற செயற்பாடுகள் கொரோனா தொற்றை மேலும் பரவலடையச் செய்வதற்கு வழிசமைக்கின்றது. அத்துடன் அவருடைய துணிக்கைகளே அவருடைய உடலுக்குச் சென்று தாக்கத்தினை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்துகின்றது.

கேள்வி:- கொரோனா பரவலில் கண்காணிப்பில் இலங்கை இரண்டாவது கட்டத்தில் இருக்கின்றநிலையில் அடுத்துவரும் நாட்களில் நிலைமைகள் மோசமடைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- அடுத்துவரும் நாட்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதில் நிச்சமற்ற தன்மையே காணப்படுகின்றது. ஆனாலும் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பரவலைத்தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக இருக்கின்றன. மேலும் தற்போது வரையில் 150இற்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு பார்க்கின்றபோது 50இக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே உயிரிழப்பு காணப்படுகின்றது.

இலங்கையின் காலநிலை, பொதுமக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பரவலைக் கட்டப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கலாம் என்று பொதுப்படையாக கூறமுடியும்.

ஆனால், கொரோனா தொற்றுடையவர்கள் நாளுக்கு நாள் அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதால் எத்தனை நாட்களில் அதன் தாக்கம் கட்டக்குள் வரும் என்று கூறமுடியாது. ஆனால் கொரோனா பரவலுக்கு எதிராக நாம் எடுத்துவரும் படிப்படியான நடவடிக்கைகள் நிச்சயமாக அதனை கட்டுக்குள் கொண்டுவரும்.

கேள்வி -கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை பயன்படுத்துவதற்குரிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா?

பதில்:- சிலநாடுகளில் மலேரியாவுக்கு பயன்படுத்திய மருந்துகளையும், எயிட்ஸுக்கு பயன்படுத்தி மருந்துகைளயும் வழங்குகின்றார்கள். அவை கொரோனா வைரஸிற்கான முழுமையான தீர்வாக அமையவில்லை. ஆனால் கொரேனா வைரஸின் வீரியத்தினை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். ஆனால் அதனை அனைத்து தரப்பினருக்கும் வழங்க முடியுமா என்பதில் பிரச்சினைகள் உள்ளன. எனவே தற்போது வரையில் கொரேனாவிற்கான மருந்து வகைகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனைவிடவும்,சமுக மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளை மையப்படுத்திய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உதாரணமாக, பெருங்காயம், மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தல் தொடர்பாக கூறப்படுகின்றது. அவையெல்லாம் பாரம்பரியமாக தொற்று நீக்கிகளாக கருதப்படுகின்றபோதும் கொரோனாவிற்கு அவை தீர்வினை வழங்குகின்றது என்று கூறமுடியாது. மேலும் வணிக நோக்கங்களின் அடிப்படையில் அவ்வாறான நம்பிக்கைகள் ஊட்டப்படுவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.