நாடளாவிய ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டங்களில் சிக்கி நெருக்கடியில் உள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்து வருவதற்கு பொறிமுறையொன்றை அமையுங்கள் என ஆளும் தரப்பினரிடத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வவுனியா உட்பட தமிழர் தயாகத்திலிருந்து தொழில் நிமித்தமும், கற்றல், கற்பித்தல், மருத்துவ சிகிச்சைகள், வணிகம் உள்ளிட்ட இதரபல காரணங்களுக்காக பலர் தலைநகர் கொழும்புக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சென்றுள்ளார்கள்.
மார்ச் மாதம் 19ஆம் திகதி மாலையில் நாட்டின் சொற்ப பகுதிகளுக்கு முதலில் ஊரடங்கு அறிவித்தல் விடுக்கப்பட்டாலும் பின்னர் அது நாடாளவிய ரீதியில் அமுலாக்கப்பட்டு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகின்றது.
கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான பயணங்களும் தற்போது முழுமையாக தடைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அவசர தேவைகள் நிமித்தம் கூட எந்தவொரு நபரும் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
விசேடமாக வவுனியாவிலிருந்து தொழில் நிமித்தம் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தவர்கள் மீண்டும் திரும்பமுடியாது அங்கேயே சிக்கியுள்ளார்கள்.
உணவகங்கள் முதல் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் அவர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதில் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.
அதேபோன்று அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுகின்றார்கள். இவ்வாறு வெளி மாவட்டங்களில் அகப்பட்டுள்ளவர்களில் பெருமளவானவர்கள் குடும்பத்தலைவர்களாக இருப்பதால் அவர்களின் குடும்பங்கள் அன்றாடப் பொருட்களை பெறுவதிலிருந்து பல விடயங்களில் இன்னல்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளனர்.
இவ்வாறான நிலையில் கொரோனா அபாய வலங்களில் இருந்து நபர்கள் வெளியேறுவதாலோ அல்லது அந்தப் பிரதேசங்களிற்கு புதியவர்கள் உள்நுழைவதாலோ தொற்றுப்பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றது என்பதை காரணம் காட்டியே இவ்வாறானவர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த காரணத்தில் நியாயப்பாடுகள் இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் இவ்வாறு வெளி மாவட்டங்களில் உணவையும், உறவுகளையும் இழந்து நட்டாற்றில் இருப்பர்களை சொந்த பிரதேசங்களுக்கு அனுப்புவதற்கான பொறிமுறையொன்றை வகுக்க வேண்டும்.
வெளிமாவடங்களில் இருந்து சொந்த பிரதேசங்களுக்கு அழைத்து வரப்படுபவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்டுபடுத்துவதன் ஊடாகவே அல்லது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதன் ஊடாகவோ (முகாமிலோ அல்லது வீட்டிலோ) சமுகத்துடன் மீண்டும் இணைக்க முடியும்.
தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவு ஏறக்குறைய மாதமொன்றை அண்மித்து வரும் நிலையில் இவர்களின் நிலைமைகளை புரிந்து கொண்டு மேற்கூறப்பட்ட காரணங்களை சீர்தூக்கிபார்த்து பொருத்தமான பொறிமுறையை உடன் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.