மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கும் பிரான்ஸ் நாட்டு பெண்

281 0

தையல் பயிற்சி பெற்ற மகளிர் குழு பெண்கள் மூலம் பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் 5 ஆயிரம் பேருக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கியுள்ளார்.கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் விரோனிக்கா (வயது 57) என்பவர் கடந்த 15 வருடமாக மகளிர் குழு பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி, அவர்கள் மூலம் துணிகள் தைத்து தன் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் துணி ஏற்றுமதி தொழில் முடங்கியது. இதையடுத்து அவர், தன்னிடம் பணிபுரியும் தையல் பயிற்சி பெற்ற மகளிர் குழு பெண்கள் மூலம் தற்போது முக கவசம் தயாரித்து 5 ஆயிரம் பேருக்கு இலவசமாக வழங்கும் பணியினை தொடங்கி உள்ளார்.

தற்போது கிராம மக்கள், போலீசார், அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் மக்கள் என பல தரப்பினருக்கும் பிரான்ஸ் நாட்டு பெண் விரோனிக்கா நேரில் சென்று இலவசமாக முக கவசம் வழங்கி சமூக சேவையாற்றி வருகிறார்.