நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அணைக்கட்டின் தடுப்பு சுவர் உடைந்து ஊருக்குள் ஆற்றுநீர் பாய தொடங்கியதால் அப்பகுதியில் வாழும் மக்களை அவசரமாக வசிப்பிடங்களைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.32 மணிக்கு கிறிஸ்ட்சர்சில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பயங்கரமான நிலநடுக்கம் நிலை கொண்டது.
ரிக்டர் அளவுக்கோலில் 7.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன. கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு சாலைகளில் வெடிப்பு காணப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையால் கடற்கரையில் 5 மீட்டர் அளவிற்கு அலை எழும்பி ஆர்ப்பரித்தது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தெற்கு தீவு பகுதியில் உள்ள கிளாரியன்ஸ் ஆற்று அணைக்கட்டின் தடுப்பு சுவர் உடைந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால், நீரோட்டம் தடைபட்ட ஆற்றுநீர், மால்பரோ மாவட்டத்தில் உள்ள சில ஊர்களை நோக்கி பாய தொடங்கியுள்ளது.
எனவே, தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.