ரூ.500, ரூ.1,000 பயன்பாட்டை தொடர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 16-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நெல்லை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில சிறப்பு மாநாடு நெல்லையில் நவம்பர் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி (இன்று) வரை நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2-வது நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சாதாரண மக்கள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த முடிவு ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்கொள்ள எவ்வித தயாரிப்பையும் செய்யாமல் மத்திய அரசு மக்களைத் திண்டாட விட்டிருக்கிறது.
அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை. சம்பளம் வழங்குவதில் சிரமம் நிலவுகிறது. சகஜ நிலை திரும்ப இன்னும் 3-4 வாரங்கள் ஆகும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை உண்மையிலேயே கருப்பு பணத்தை மீட்டெடுக்க உதவாது என்பதுடன், சாதாரண மக்களின் வாழ்க்கையை முடக்குவதாகவும் அமைந்திருக்கிறது.
இச்சூழலில், மாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை, பழைய ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறைகூவலின் அடிப்படையில் ஏற்று 16-11-2016 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும், வாய்ப்புள்ள பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.