வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

257 0

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் தினேஸ் குணவர்தன வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் அவதியுறும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

உலக நாடுகளுடன் இலங்கை முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் சம்மந்தமாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சர் அதிகாரிகளை பணித்துள்ளார்.

அதற்கமைய 67 க்கும் அதிகமான வெளிநாடுகளில் உள்ள இலங்கை துதூவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நிலவும் தற்போதைய பிரச்சினைகள் முடிவடைந்தவுடன் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற இணைய பக்கத்தில் இதுவரை 46,000 பேர் தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.