ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பதுக்கல்காரர்களுக்கு பாதிப்பில்லை, நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
புதுவை நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று பெரியார் சிலையருகில் தனது பிரசாரத்தை தொடங்கி நெல்லித்தோப்பு தொகுதியில் திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதி மக்களின் ஆதரவினால் முதல்-அமைச்சர் நாராயணசாமி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
புதுவை சட்டமன்றத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. எப்படிப்பட்ட ஆட்சி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறது. எப்படிப்பட்ட ஆட்சி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி உள்ளது.
நாராயணசாமி முதல்-அமைச்சரானபின்தான் புதுவையில் ரவுடிகள் கொட்டம் ஒழிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமி நினைத்ததை செய்து முடிப்பார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தை சீர்திருத்த போகிறேன், கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன் என்று கூறி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதை நாம் வரவேற்கிறோம். அதில் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் முன்பு இதனால் ஏற்படப்போகும் பிரச்சினைகளை சரிசெய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை.
கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே கூறினார். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று கூறினார். ரூ.15 லட்சம் வேண்டாம், ரூ.15 ஆயிரமாவது போட்டாரா? இல்லை வெறும் ரூ.15-வது போட்டாரா? ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது முதல் ஒரு வார காலமாக வங்கிகளின் வாசலில் மக்கள் முண்டியடிக்கிறார்கள். நமது காசை நம்மால் எடுக்க முடியவில்லை.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பதுக்கல்காரர்கள் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக நேர்மையாக பணத்தை சம்பாதித்த மக்கள் அதை மாற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உண்மையிலேயே பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றால் கன்டெய்னர் லாரியில் பணம் கடத்தப்பட்டபோது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தி.மு.க. ஐகோர்ட்டுக்கு சென்றபின்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மத்திய அரசு ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது. தமிழ்மொழிக்கு புறம்பான செயலையும் செய்துவருகிறது. ஜி.எஸ்.டி., குலக்கல்வி என பல அக்கிரமங்களை செய்து வருகிறது. அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.