குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

259 0

மதுபானம் கிடைக்காததால் சேவின் லோசனை குளிர்பானத்தில் கலந்து கடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபான பிரியர்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் போதைக்காக மாற்று வழியை கையாள்கின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா என்பவர் தனது நண்பர்களான அருண் பாண்டி, அசன் மைதீன் ஆகியோருடன் அடிக்கடி டாஸ்மாக் சென்று மது அருந்துவது வழக்கம். தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கடந்த சில தினங்களாக மது கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சோடாவில் சேவிங் லோசனை கலந்து குடித்தால் போதை வரும் என அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் நேற்று இரவு சோடாவில் சேவிங் லோசனை கலந்து குடித்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் மூன்று பேரும் மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, பழமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருண் பாண்டி, அசன் மைதீன் இருவரும் உயிரிழந்தனர்.

அன்வர் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.