நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகளை மாகாண ஆயுர்வேத திணைக்களங்களூடாக வீடுகளுக்கே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய, ஆயுர்வேத உற்பத்திகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பில், ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான பரிந்துரைக்கு சுகாதார அமைச்சினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினால் ஆயுர்வேத முறையிலான மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வேப்பிலை மற்றும் தேசிக்காய் இலைகளை பயன்படுத்தி புகை விசுறுமாறும் இந்த விசேட குழு பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை, கொத்தமல்லி, இஞ்சி உள்ளிட்ட மூலிகைகள் அடங்கிய கசாயத்தை பருகுவதற்கும் ஆயுர்வேதத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிக பலன்களை தரும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த மூலிகைகள் அடங்கிய பக்கெட்களை ஆயுர்வேதத் திணைக்களம் தற்போது தயாரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.