கொரோனா அச்சம் காரணமாக 14 நாட்கள் சுய தனிமைபடுத்தலில் இருந்த ஏஞ்சலா மெர்கல் மீண்டும் தனது அலுவலகம் திரும்பியுள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடான ஜெர்மனியிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 91 ஆயிரத்து 159 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் காய்ச்சல் காரணமாக மார்ச் 20-ம் தேதி டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். ஆனால், மெர்கலுக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு மார்ச் 22-ம் தேதி கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் தனக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என அச்சமடைந்த ஏஞ்சலா அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த ஏஞ்சலாவுக்கு பல முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைகள் அனைத்திலும் அவருக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற முடிவுகளே வந்தது.
இதையடுத்து 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு நேற்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தனது அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டார். அதிபர் மெர்கல் அலுவலகம் வந்துள்ளார் என்ற தகவலை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக வீட்டில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்ட மெர்கல் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.