பெருந்தோட்ட மக்களுக்கான உரிமைகளை கெஞ்சிக் கேட்கவில்லை, தட்டியே கேட்கப்படுகின்றது. இதனால் 2017 வரவு செலவு திட்டத்தில் 25000 வீடுகள் மேலதிகமாக காணி உரித்துடன் கிடைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
குன்றும் குழியுமாக மக்கள் பாவனைக்குதவாத நிலையில் காணப்பட்ட இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை முன்னிலிருந்து குட்டிமலை தோட்ட வழியாக மிடில்வத்தை வரையிலான 2 கிலோ மீற்றர் வீதியை புனரமைக்கும், 1 கோடியே 20 இலட்சம் ரூபா செலவிலான வேலைத் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் நேற்று (13) ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, பாதை புனரமைப்புக்கான பணிகளையும் ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது அமைச்சர் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நல்லாட்சி அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு நன்மை பெரும் வகையில் பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
அந்த வகையில் 2020ம் ஆண்டு மலையகம் மாற்றம் பெரும் வகையில் வீடு, கல்வி, காணி என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களால் செய்ய முடியாத பணிகளை அரசியலுக்கு வந்து 13 வருடங்களில் நான் முன்னெடுத்து வருகின்றேன். இதனடிப்படையில் தற்பொழுது தனி வீடுகளாக 2000 வீடுகள் அமைக்கப்பட்டு வந்துள்ளது. இவைகள் கடந்த அரசாங்க காலத்தில் அமைக்கப்பட்டு வந்த கோழி கூடுகள் அல்ல.
இங்கு மலையகத்தில் கட்டப்பட்டுள்ள மாடி வீடுகளும் கோழி கூடுகளாகவே அமைந்திருந்தது. ஆனால் மக்கள் சுகாதாரமாக வாழ கூடிய வகையில் எனது அமைச்சின் ஊடாக நல்ல வீடுகளே அமைத்துக் கொடுக்கப்படுகின்றது.
2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என நுவரெலியா மாவட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறி வருகின்றனர். அவர்களுக்கு கண் இருக்கின்றதா அல்லது காது கேட்கின்றதா என்பது தெரியவில்லை.
வரலாற்று ரீதியில் முதல் முறையாக வரவு செலவு திட்டத்தின் ஊடாக மலையக மக்களுக்கு பயன்தரும் வகையில் நிதி ஒதுக்கீடும் சலுகைகளும் இந்த அரசாங்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின் பயனாகவே எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும். இதற்கு அமைவாக தோட்ட பகுதிகளில் கட்சி பேதமற்ற மக்கள் ஒற்றுமை எமக்கு வேண்டும்.
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் பேட்டைகள் அமைக்கப்படும். அதற்கமைவாக இரண்டு வருடத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்க எமது அமைச்சு திட்டம் வகுத்துள்ளது.
தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை வருமானத்தில் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காரணம் அவர்களுக்கான சம்பளம். நடந்து முடிந்த சம்பள ஒப்பந்தத்தில் நான் கையொப்பம் இடவில்லை. ஆனால் சம்பளத்தை உயர்த்தி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டவர்கள் 730 ரூபாய்க்கு கையொப்பம் இட்டுள்ளனர்.
இருந்தாலும் 18 கிலோ நாளொன்றுக்கு கொழுந்து கொய்ந்து கொடுத்தால் தான் 730 ரூபாய் கிடைக்கும் என அதில் சொல்லப்படுகின்றது. இம்முறை தோட்ட தொழிலாளர்கள் 590 ரூபாய் அளவிலே சம்பளத்தை பெற்றனர். இவ்வாறாக தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றம் நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றது. நான் தொழிலாளர்களை ஏமாற்ற துணைப்போக மாட்டேன் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.