வேலூர் அருகே சாராயம் விற்பதை தட்டிக் கேட்ட கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய வியாபாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
வேலூர் அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் கும்பலாக சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த மலைப்பகுதிக்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் பலர் சாராயம் குடிக்க சென்று வந்துள்ளனர். அதிகமானவர்கள் அங்கு சென்று வருவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக புலிமேடு பகுதி கிராம மக்கள் கருதினர். இதனால் அந்த மலைப்பகுதியில் சாராயம் விற்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்கு ஏன் சாராயம் விற்கிறீர்கள் என கேட்டு அவர்களை கண்டித்ததோடு சாராயம் விற்க கூடாது என எச்சரித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சாராய கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து தங்களை கண்டித்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் பூபாலன் (வயது30), சங்கர்(23), அண்ணாமலை(19) ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தது. இதில் அவர்கள் 3 பேரும் காயமடைந்து சுருண்டு மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாராயம் விற்ற கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தப்பி ஓடிய சாராய கும்பலை தேடி வருகின்றனர்.