100 ரூபாய்க்கு வீடுதேடி வரும் காய்கறி தொகுப்பு: அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்

247 0

கோவையில் 100 ரூபாய்க்கு வீடுதேடி வரும் காய்கறி தொகுப்பு அடங்கிய பை விற்பனை திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.கொரோனா வைரஸ் தொற்று கோவை மாவட்டத்தில் அதிகரித்து இருப்பதை தொடர்ந்து பொதுமக்கள் மார்க்கெட்டுகளுக்கு வந்து காய்கறிகளை வாங்குவதை தவிர்க்க, வேன்கள் மூலம் 12 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பை 100 ரூபாய்க்கும், இரட்டிப்பு எடையுடன் கூடிய பை 200 ரூபாய்க்கும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்து இருந்தார்.இதன்படி ரூ.100 விலை தொகுப்பில் தக்காளி 1 கிலோ, பெரிய வெங்காயம் ½ கிலோ, பச்சை மிளகாய் 150 கிராம், தேங்காய் ஒன்று, கத்தரிக்காய் ¼ கிலோ, வெண்டைக்காய் ¼ கிலோ, புடலங்காய் 300 கிராம், முருங்கைக்காய் ¼ கிலோ, பீர்க்கங்காய் ½ கிலோ, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சிறிது ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

காய்கறி தொகுப்புகளை பொதுமக்களுக்கு வீடு தேடி விற்பனை செய்ய, கோவையில் 5 மண்டலங்களுக்கு 5 வாகனம் வீதம் மொத்தம் 25 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காய்கறி தொகுப்பு விற்பனை திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.