சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் மிகச் சிறந்த நண்பர் எனவும் ஊடகங்களே எப்போதும் முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முன்னுரிமைகொடுத்து வருவதாகவும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்காவுக்கு சீனா வழங்கிய கடன்கள் தொடர்பாக சிறீலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நிதியமைச்சரின் கருத்துக்களை விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், சீனா மிகச் சிறந்த நண்பன், மற்றும் சிறிலங்காவுடன் நூற்றாண்டுகளாக தொடர்புகளை வைத்துள்ள அண்டை நாடு. சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காளி.
சீனத் தூதுவரும் என்னுடைய சிறந்த நண்பர். ஊடகங்கள் எப்போதும் முரண்பாடுகளையும், கருத்துவேறுபாடுகளையுமே முன்னுரிமைப்படுத்தும்.
அண்மையில் நான் அவரைச் சந்தித்தபோது ஒரு ஆலோசனை கூறியிருந்தேன். அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் ஏதாவது தவறிருந்தால், ஊடகங்கள் ஊடாக அதனைத் தீர்ப்பதற்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சினூடாக அந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.
ஏனென்றால், ஊடகங்கள் எப்போதுமே முரண்பாடுகளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.