டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை, எளிய மக்களின் பசியை போக்க அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகங்களே கைகொடுத்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேற்று காலை வருகை தந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உணவு தயாரிக்கும் அறையை சென்று பார்வையிட்டார்.
பின்னர், இட்லி, பொங்கல் ஆகியவற்றை ருசிபார்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்களிடமும் உணவின் தரம், ருசி குறித்து கேட்டறிந்தார். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், வெளியே வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலைக்கு செல்கின்றவர்கள், ஏழை மக்கள் மலிவு விலையில் உணவை வாங்கி உண்ணுவதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த உன்னதமான திட்டம், அம்மா உணவகம் திட்டம்.
இந்த திட்டம் இன்றைக்கு மக்களுக்கு கை கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: அம்மா உணவகத்தில் வழங்குகின்ற உணவுகளை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை இருக்கிறதே? ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்கிறார்களே?
பதில்: மலிவு விலையில் தானே உணவு இருக்கிறது. இப்பொழுது ரூ.1-க்கு இட்லி தருகிறோம். இந்தியாவிலேயே ரூ.1-க்கு ஒரு இட்லி கொடுத்து தமிழ்நாடு, அதற்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
எவ்வளவு உணவு வேண்டும் என்றாலும் கொடுக்கச் சொல்லியிருக்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு நான்கரை லட்சம் பேர் அம்மா உணவகத்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் உணவு தயாரிப்பதற்கு அரசால் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகத்தின் மூலமாக மக்களுக்கு எளிதாக மலிவான விலையில் உணவு கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற உணவகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் அதிக விலைக்கு உணவுகளை எப்படி விற்க முடியும். பார்சல் பெறுவோர்கள் பெற்றுக்கொள்ளலாம். உணவகம் எங்கும் திறக்கவில்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: மாதத்தவணை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டும், வங்கிகளில் இருந்து மாதத் தவணை கட்ட குறுஞ்செய்தி வருகிறதே?.
பதில்: நேற்றைய தினம் எங்களுடைய நிதித்துறை செயலாளரும், வங்கி உயர் அதிகாரிகளும் பேட்டியே கொடுத்தார் கள். அவர்கள் தான் வசூல் செய்கிறார்கள், அவர்களே பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதானால், மத்திய நிதி மந்திரியின் கவனத்துக்கு இதை கொண்டு போகிறோம். ஏற்கனவே, தமிழக அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. மத்திய அரசும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இருந்தாலும், நீங்கள் சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்துவோம்.
கேள்வி: டெல்லியில் ஜமாத் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேர் பங்கு பெற்றார்கள். அதில் கிட்டத்தட்ட 500 பேரை கண்டுபிடித்து விட்டார்கள். மற்றவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் களை தனிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
பதில்: நேற்றைய தினம் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், ஊடகத்தின் வாயிலாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அளித்த பேட்டியில் இதுகுறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார். சுமார் 1500 பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1331 பேர் என்று கருதுகிறேன், அவர்கள் கலந்துகொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் டெல்லியிலேயே இருக்கிறார்கள். கலந்து கொண்டவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 515 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் அந்த சோதனைகளில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக முடிவு வந்திருக்கிறது.
அதனால் ஏனைய நபர்கள் தானாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஏனென்றால், அவர்களுடைய விலாசம் முழுமையாக கிடைக்கவில்லை. அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களது குடும்பம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, நாட்டில் உள்ள பலர் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். இந்த நோயினுடைய தாக்கத்தை அறிந்து, தாங்களாக முன்வந்து அரசிற்கு தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். பலர் குணமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கட்டத்திலேயே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகும் சூழ்நிலை இருக்கிறது. அதைத்தான் நமது சுகாதாரத் துறை செயலாளர் ஊடகம் மற்றும் பத்திரிகையின் வாயிலாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
கேள்வி: 21-ந் தேதி ஈஷாவில் கூட கூட்டம் நடந்திருக்கிறது. பல பேர் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அறிகுறி இருந்தால் வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: மருத்துவமனைகள் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பலர் இடம் கொடுக்கிறார்கள். அதை பயன்படுத்த அரசு முன்வருமா?
பதில்: அந்த அளவுக்கு இன்னும் தேவைப்படவில்லை. நாம் 17 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றோம். 17 ஆயிரம் பேர் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யக்கூடிய அளவுக்கு மருத்துவமனைகள் இருக்கின்றன. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றபோது அதையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்.
கேள்வி: விவசாயிகள் தங்கள் விளைச்சலை விற்க முடியவில்லை, நிறைய வீணாகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து?
பதில்: விவசாயிகளுக்கு எந்தவித தடையும் இல்லை. அறுவடை செய்யவோ, வேளாண் பணியை மேற்கொள்ளவோ, எவ்வித சிரமமும் இல்லாமல் பணி மேற்கொள்ளலாம். அதேபோல, விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கும் எந்த தடையும் கிடையாது. அதற்கு அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் பாதிப்பு. இந்தியா மட்டுமல்ல, உலகமே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. நம் இந்தியா மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகையே இந்த நோய் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நோயினுடைய தன்மையை கருதி, அந்தந்த நாட்டிற்கு தக்கவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு ஒருவர் கூட இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் அரசினுடைய நோக்கம். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.