வளர்ந்த நாடுகளே கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பேரழிவை சந்தித்து வருகின்றன. அதனால் நாம் தனித்திருந்து கொரோனா வைரசினால் ஏற்படும் பேரழிவை தடுக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொரோனா வைரசின் அபாயம், அதை பரவாமல் தடுக்க நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஏற்கனவே 2 கடிதங்களை பொதுமக்களுக்கும், வக்கீல்களுக்கும் எழுதியுள்ளார். இந்த நிலையில், 3-வது கடிதமாக நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இயற்கையின் கடுமையான கோபம் தற்போது நமது வலிமையை சோதித்துள்ளது. இந்த சோதனையிலிருந்து நம்மை பாதுகாக்க முயற்சி செய்யும் வகையில் நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து கொள்ளவேண்டும். சர்வதேச அளவில் தீவிரமாக பரவி, பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ், கள்ளத்தனமாய் நம்மையும் சூழ்ந்துவிட்டது. சரியாக மதிப்பிடாததால் பல வளர்ந்த நாடுகள் கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பேரழிவை சந்தித்து வருகின்றன.
இடம்பெயர்தலும், மற்றவர்களுடனான தொடர்பும்தான் இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாகும். “கண்ணுக்கு தெரியாமல் எதிரி இருந்தால், நாமும் மறைந்திருப்பதுதான் விவேகம்” என்று சாணக்கியன் முன்பே கூறியுள்ளார். அவர் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்.
வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரசின் பலத்தை அதிகரிக்கிறோம். தனித்திருந்து பேரழிவை தடுக்க வேண்டும். தனித்திருப்பதை பாதுகாப்புக்கான பயிற்சியாகவும், அப்படி பயிற்சி பெற ஒரு வாய்ப்பாக கருதவேண்டும். மனதை அடக்கி காணும் வெற்றிக்கு இணையாக வேறு எந்த வெற்றியும் கிடையாது. இதை கடைபிடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதற்கு நம்மை தயார் படுத்திக்கொண்டு, நம்மை தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது நம்மை போன்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து குடிமகன்களின் நலனுக்காகவும்தான். நமக்கு நாமே கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தாலும், இனிவரும் காலங்கள் கடினமாகவே இருக்கும். ஒன்றாக இருப்பதை சிறிது இழந்தாலும் அதுதான் நமக்கு வெற்றியைத்தரும்.
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பாதி முடிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறினாலும், மருந்து கண்டுபிடிப்பது என்பது இன்னும் சந்தேகமாக தான் உள்ளது. அதேநேரம், தற்போது நாம் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சி சோதனை முயற்சியாக இருந்தாலும் வெற்றிக்கான வாய்ப்பாக அதை மாற்ற வேண்டும். உங்களை நீங்களே வெற்றி கொள்வதைவிட வேறு வெற்றி எதுவும் இல்லை.
இவ்வாறு தலைமை நீதிபதி கூறியுள்ளார்.